கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; டிரைவர் பலி
கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி,
கச்சிராயப்பாளையத்தை சேர்ந்தவர் பாவாடை மகன் கொளஞ்சியப்பன் (வயது 42). இவர் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று கொளஞ்சியப்பன் வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோட்டை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரான முருகன்(32) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கச்சிராயப்பாளையம் நோக்கி வந்தார். கள்ளக்குறிச்சி அருகே அம்மாநகர் என்ற இடத்தில் சென்ற போது கொளஞ்சியப்பன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும், முருகன் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த கொளஞ்சியப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில் விபத்து பற்றி அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான கொளஞ்சியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.