மூணாறு அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற புலி, பொதுமக்கள் அச்சம்


மூணாறு அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற புலி, பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 1 Sept 2017 4:15 AM IST (Updated: 1 Sept 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

மூணாறு அருகே பசுமாட்டை புலி அடித்துக் கொன்றது. தொடரும் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மூணாறு,

மூணாறை அடுத்த கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிசன் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். தோட்ட தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை மேய்ச்சலுக்காக வனப்பகுதியில் அவிழ்த்து விட்டிருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் பசுமாடு வீடு திரும்பவில்லை. இதையடுத்து பசுமாட்டை தேடி அய்யனார் வனப்பகுதிக்கு சென்றார்.

அப்போது பசுமாடு வனப்பகுதியில் இறந்து கிடந்தது. மேலும் பசுவின் உடல் சிதைந்த நிலையில் இருந்தது. பசுமாட்டின் கழுத்து பகுதி கடித்து குதறப்பட்டு இருந்தது. இதுதவிர நகக்கீறல்களும் தென்பட்டன. இதனால் பசுமாட்டை புலி அடித்துக் கொன்று இருக்கலாம் என்று அய்யனார் சந்தேகித்தார்.

இதுகுறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பசுமாட்டின் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர். மேலும் மூணாறு கால்நடை மருத்துவர் மீனாம்மாளின் உதவியுடன் பசுமாட்டின் உடலை பரிசோதனை செய்தனர். அப்போது பசுவை புலி அடித்துக் கொன்றது உறுதியானது. பின்னர் பசுமாட்டின் உடலை வனப்பகுதியிலேயே புதைத்தனர்.

ஏற்கனவே இந்த பகுதியில் 10–க்கும் மேற்பட்ட பசுமாடுகளை புலி அடித்துக் கொன்றுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அய்யனாருக்கு சொந்தமான பசுமாட்டை அடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அந்த பகுதியில் புலி அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். புலியை கண்காணிப்பதற்காக வனப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில், புலியின் உருவம் பதிவாகி உள்ளது.

இருந்தபோதிலும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்களின் குற்றச்சாட்டு எதிரொலிக்கிறது. எனவே புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பசுமாட்டை புலி அடித்துக் கொன்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புலி நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம். விரைவில் கூண்டு வைத்து பிடித்து விடுவோம். அதுவரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனியாக யாரும் நடந்து செல்ல வேண்டாம். புலி நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.


Next Story