பணமதிப்பு இழப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு


பணமதிப்பு இழப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Sept 2017 5:30 AM IST (Updated: 1 Sept 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் பணமதிப்பு இழப்பால் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்காகவும், கள்ள நோட்டை ஒழிக்கப் போவதாகவும் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே நாள் இரவில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.

அப்போதே முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் இது தவறான முடிவு. இந்த நடவடிக்கை பொருளாதார இழப்பை அதிகரிக்கச் செய்யும் என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.

ரிசர்வ் வங்கி கணக்கீட்டின் படி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் 15லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் பணமதிப்பு இழப்பின் படி திரும்ப வந்தது ரூ.15 லட்சத்து 24 ஆயிரம் கோடி. தற்போது நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுக்களில் ஒரு சதவீதமான ரூ.16 ஆயிரம் கோடி பணம் தான் வரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுக்கள் அச்சடிக்க இதுவரை ரூ.21 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே பண மதிப்பு இழப்பு திட்ட அறிவிப்பால் நாட்டிற்கு லாபம் இல்லை. நஷ்டம்தான். பொருளாதார வளர்ச்சி 1.4 சதவீதம் குறைந்துள்ளது.

பண மதிப்பு இழப்பு திட்ட அறிவிப்பால் வங்கிகளில் பணத்தை எடுக்கச் சென்ற ஏழைகள் 100க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இதற்கு எல்லாம் யார் தார்மீக பொறுப்பு ஏற்பார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மத்திய அரசை பொறுத்தவரை தனது கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு விதியையும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு விதியையும் கடைபிடித்து வருகிறது. அரியானாவில் கற்பழிப்பு வழக்கில் சாமியார் ஒருவருக்கு தண்டனை விதித்ததை அடுத்து நடைபெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனால் பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரபிரதேசம் கோரக்பூரில் இதுவரை நூற்றுக்கணக்கான குழந்தைகள் மர்மமாக இறந்துள்ளன. இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. பிரதமரும், மத்திய மந்திரிகளும் எதிர்க்கட்சி மாநிலங்களை குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

புதுச்சேரி துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணியில் கவர்னர் தலையிட்டதால் அந்த பணி மத்திய அரசின் டிரெஜிங் கார்பரே‌ஷன் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தூர்வாரியதற்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. எனவே ஊழல் நடைபெற்றதாக கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. மத்திய அரசிடம் ஒப்பந்தம் போட்டபடி தூர்வாரிய பின்னர் தான் பணத்தை தருவோம்.

தற்போது முகத்துவார பகுதியில் மீண்டும் மணல் சேர்ந்துள்ளது. மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தூர்வாரும் பணி மார்க் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் முகத்துவாரம் தூர்வாரும் பணிக்கு சென்னை துறைமுகத்தின் உதவியும் கேட்கப்பட்டுள்ளது.

எங்கள் அரசு பொறுப்பேற்றபின் புதிய தொழிற்கொள்கை கொண்டு வரப்பட்டது. காரைக்கால் பகுதியில் 20 தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கேட்டுள்ளனர். புதுவையில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்தால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருவதாக கூறியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story