சம்பா சாகுபடிக்கு காவிரி நீரை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


சம்பா சாகுபடிக்கு காவிரி நீரை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Sept 2017 3:45 AM IST (Updated: 1 Sept 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

சம்பா சாகுபடிக்கு காவிரி நீரை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, வேளாண் இணை இயக்குனர் மயில்வாகனன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

மாசிலாமணி (விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்):- செப்டம்பர் மாதம் தொடங்கி விட்டதால் பருவ மழை கிடைக்குமென்ற நம்பிக்கையுள்ளது. எனவே சம்பா சாகுபடி பணிகளை தொடங்குவதற்கு கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுகிய கால விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். 25 சதவீத மானியத்தில் கம்பி வேலி அமைக்க கம்பி கொடுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

ராஜசேகர்:- திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் சமுதாய ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு புலிவலத்தில் இ-சேவை மையம் அமைத்து தர வேண்டும். வில்வனபடுகை-புலிவலம் இணைப்பு பாலம் கட்டி தர வேண்டும்.

தமிழ்செல்வி:- நடப்பு ஆண்டில் விவசாய பணிகளை மேற்கொள்வது குறித்து வேளாண்துறை தெளிவுப்படுத்த வேண்டும். வேலையிழந்து தவிக்கும் விவசாய தொழிலாளர் களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

திருவள்ளுவர்:- திருத்துறைப்பூண்டி பகுதியில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வளவனாற்றில் முழுமையாக தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
முருகையன்:- வளவனாற்று முகத்துவாரத்தை தூர்வார வேண்டும். உதயமார்த்தாண்டபுரம் ஏரியை சுத்தம் செய்ய டெண்டர் விடப்பட்டதுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம்.

கூட்டத்தில் கலெக்டர் நிர்மல்ராஜ் பேசியதாவது:- திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு தொகை கிடைக்க ரூ.122 கோடி வங்கியில் இருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.250 கோடி பிரீமியம் செலுத்தப்பட்டுள்ளது. நேரடி நெல் விதைப்பில் ஈடுபடும் விவசாயிகள் உடனடியாக விதையை தெளித்து விட்டு பயிர் காப்பீடுக்கான பிரிமீயத்தை காலதாமதம் இன்றி செலுத்தவேண்டும். தென்னை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story