விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு ஆவணங்களை இணையதளம் மூலம் பெற்று கொள்ளலாம்


விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு ஆவணங்களை இணையதளம் மூலம் பெற்று கொள்ளலாம்
x
தினத்தந்தி 1 Sept 2017 4:00 AM IST (Updated: 1 Sept 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு ஆவணங்களை இணையதளம் மூலம் பெற்று கொள்ளலாம் என போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

பொதுமக்கள் சேவையை மேம்படுத்தி வழங்குவதற்காக தமிழ்நாடு போலீஸ் இணையதளம் http://ese-rvices.tnpolice.gov.in மூலம் 2 புதிய வசதிகளை தமிழக போலீஸ்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு ஆவணங்களை பெறும் வசதி மற்றும் தொலைந்து போன ஆவணங்கள் பற்றிய புகார் அளிக்கும் வசதி. தஞ்சை மாவட்டத்தில் விபத்தில் காயம் அடைந்த 2 பேர், இந்த இணையதள வசதியை பயன்படுத்தி முதன்முறையாக ஆவணங்களை பெற்றனர். அந்த ஆவணங்களை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நேற்று வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இழப்பீட்டு தொகையை விரைவாக பெற்று கொள்ள உதவி செய்ய இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் இறந்தவர்களின் சட்ட பிரதிநிதிகள் இந்த வசதியின் மூலம் ஆவணங்களை பெறலாம். புலன் விசாரணையின்போது போலீஸ் துறையில் பதிவுசெய்யப்பட்ட அவர்களது செல்போன் எண்ணை அடிப்படையாக கொண்டு அனுமதி வழங்கப்படும். நெட் பேங்க் வசதியை பயன்படுத்தி ரூ.10 ஒரு ஆவணத்திற்கு செலுத்தி ஆவணங்களை பெற்று கொள்ளலாம். அரசு இ-சேவை மையத்துடன் இந்த சேவையை ஒருங்கிணைப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. விரையில் அரசு இ-சேவை மையம் மூலம் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

சில ஆவணங்கள் தொலைந்தது குறித்து அறிக்கை செய்வதற்கான ஆன்லைன் வசதியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் பாஸ்போர்ட், வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் தொலைந்து போனது பற்றி போலீஸ்துறையில் புகார் அளித்து ஒப்புதல் பெறும் செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆதார், பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை போன்ற அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், தொலைந்து போன ஆவண அறிக்கை ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணுடன் உடனடியாக பயனீட்டாளருக்கு அளிக்கப்படும். அதே சமயத்தில் இந்த அறிக்கையின் நகல் அவரின் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story