நாமக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கால்கோள் நிகழ்ச்சி அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பங்கேற்பு


நாமக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கால்கோள் நிகழ்ச்சி அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Sept 2017 10:00 AM IST (Updated: 1 Sept 2017 3:30 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக பந்தல் அமைக்க கால்கோள் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 16-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிக்கு கால்கோள் நிகழ்ச்சி நேற்று நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கருப்பட்டிபாளையத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் பி.ஆர்.சுந்தரம், செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:- நாமக்கல்லில் வருகிற 16-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. அதற்காக கால்கோள் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் வந்துள்ளதை பார்த்தால் உங்களுக்கே தெரியும். நாமக்கல் மாவட்டம் எப்பொழுதும் ஒற்றுமையான மாவட்டம். ஜெயலலிதா ஆட்சி நிலைக்க அனைவரும், ஒருங்கிணைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகளை நீக்கி வருவது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதை அவரிடம்தான் கேட்கவேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இவ்விழாவில் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராமசாமி, செந்தில், உதவி கலெக்டர்கள் ராஜசேகரன், பாஸ்கரன், நாமக்கல் நகராட்சியின் முன்னாள் துணை தலைவர் சேகர், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று மாரத்தான் போட்டியும் நடத்தப்பட்டது. நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து இந்த போட்டியை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்கள் மோகனூர் சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, பிரதான சாலை, பஸ்நிலையம், போலீஸ் நிலையம், டாக்டர் சங்கரன் சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த நபர்களுக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பரிசு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story