விபத்தில் இறந்த கடை உரிமையாளர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் இறந்த கடை உரிமையாளர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 1 Sept 2017 3:33 AM IST (Updated: 1 Sept 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் இறந்த கடை உரிமையாளரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசுபஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் நேற்று நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல்,

நாமக்கல் தட்டாரத்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 41). இவர் நாமக்கல்லில் இருசக்கர வாகன உதிரிபாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி நாமக்கல்லில் உள்ள சேலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசு பஸ் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு போக்குவரத்து கழகம் இறந்துபோன ரவிச்சந்திரன் குடும்பத்திற்கு ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நஷ்டஈடு வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே ரவிச்சந்திரன் குடும்பத்தினர் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தற்போதைய நீதிபதி இளவழகன் சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோர்ட்டு அமீனா முன்னிலையில் கரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் நாமக்கல்லில் ஜப்தி செய்யப்பட்டது. இந்த சம்பவம் நேற்று பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story