சேலம் கிச்சிப்பாளையத்தில் வாலிபர் மர்மசாவு


சேலம் கிச்சிப்பாளையத்தில் வாலிபர் மர்மசாவு
x
தினத்தந்தி 1 Sept 2017 3:51 AM IST (Updated: 1 Sept 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கிச்சிப்பாளையத்தில் மர்மமான முறையில் இறந்த வாலிபர் உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் கிச்சிப்பாளையத்தில் உள்ள களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் ஹரி (வயது 18). அதே பகுதியை சேர்ந்தவர் விஜி (28). இவரும் ஹரியும் களரம்பட்டியில் உள்ள ஒரு பாக்குமட்டை கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று ஹரியின் அண்ணன் கார்த்திக் (19) மது வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மதுபானத்தை ஹரி, விஜி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து குடித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது ஹரி திடீரென தலைவலி ஏற்பட்டதாக கூறி, அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் விஜியும் உடல்நிலை சரியில்லை என கூறி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

வீட்டில் இருந்த ஹரிக்கு சிறிதுநேரத்தில் வாயில் இருந்து கோழை வடிந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் ஹரியை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே ஹரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே விஜியும் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஹரி இறந்தது தொடர்பாக போலீசாருக்கு தெரியாமல் இறுதிசடங்கு செய்ய முயன்றதாக தெரிகிறது. இதையறிந்த உதவி போலீஸ் கமிஷனர் அன்பு, கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் ஹரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் ஹரியின் அண்ணன் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அளவுக்கு அதிகமாக மது குடித்து ஹரி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மது அருந்திய வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story