வரலாறு படைத்த பெண்மணிகள் : தானியா சச்தேவ்


வரலாறு படைத்த பெண்மணிகள் : தானியா சச்தேவ்
x
தினத்தந்தி 1 Sept 2017 6:00 PM IST (Updated: 1 Sept 2017 11:52 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய சதுரங்க வீராங்கனை தானியா சச்தேவ். டெல்லியில் 1986-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி பிறந்தார்.

ர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய சதுரங்க வீராங்கனை தானியா சச்தேவ். டெல்லியில் 1986-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி பிறந்தார். குழந்தைப்பருவத்தில் துருதுரு என்று இருந்த அவரை சதுரங்க விளையாட்டில் அறிமுகம் செய்து வைத்தார் அவரது தாய் அஞ்சு. 6 வயதில் சதுரங்கம் விளையாடத்தொடங்கிய தானியா, தனது அபாரமான நினைவாற்றல், காய்களை நகர்த்தும் திறன் ஆகியவற்றின் மூலம் வெற்றிகளை குவித்தார். இதையொட்டி அவரை சர்வதேச அளவில் சிறந்த வீராங்கனையாக்கும் முயற்சியில் அவரது பெற்றோர் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவருக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெற்ற பல்வேறு சதுரங்க போட்டிகளில் தானியா கலந்து கொண்டு வெற்றிகளை குவித்தார். தனது 8 வது வயதில் இங்கிலாந்து சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தனது முதல் சர்வதேச வெற்றியை தானியா பெற்றார். மிக இளம் வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சிறப்பும் இதன்மூலம் அவருக்கு கிடைத்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் அவர் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தார்.

பின்னர் பல்வேறு தேசிய, ஆசிய, சர்வதேச போட்டிகளில் தானியா கலந்துகொண்டு வெற்றிகளை குவித்தார். 12 வயதுக்குட்பட்டோர் சதுரங்கபோட்டி, 14 வயதுக்குட்பட்டோர் சதுரங்க போட்டிகளில் அவர் சர்வதேச அளவில் வெற்றிகள் பெற்றார்.

ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி, செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி ஆகியவற்றில் இந்தியா சார்பில் தனி நபர் மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டார். இந்த போட்டிகளில் மட்டும் இதுவரை அவர் 25 பதக்கங்கள் பெற்றுள்ளார்.

அவரது சாதனை வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது 2005- ம் ஆண்டு அவர் பெற்ற பெண்கள் கிராண்ட் மாஸ்டர் சாம்பியன் பட்டமாகும். இதையடுத்து 2008-ம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டமும் பெற்றார். தற்போது உலக தர வரிசையில் தானியா 59-வது இடத்தில் இருக்கிறார்.

அவரது சாதனைகளைப்பாராட்டி மத்திய அரசு அவருக்கு 2009-ம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது. தற்போது செஸ் விளையாட்டு பயிற்சியாளராகவும், விளையாட்டு விமர்சகராகவும் இருக்கிறார். குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு செஸ் விளையாட்டு குறித்த பயிற்சிகளை அளித்து வருகிறார்.

தானியாவுக்கு 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் பெயர் வீரஜ் கட்டாரியா. இவர் கட்டிடக்கலை நிபுணர் ஆவார்.

Next Story