ரூ.2 லட்சம் மோசடி வழக்கு கோவை கோர்ட்டில் இடைத்தரகர் சுகேஷ் ஆஜர்


ரூ.2 லட்சம் மோசடி வழக்கு கோவை கோர்ட்டில் இடைத்தரகர் சுகேஷ் ஆஜர்
x
தினத்தந்தி 1 Sept 2017 3:00 PM IST (Updated: 1 Sept 2017 1:49 PM IST)
t-max-icont-min-icon

ரூ.2 லட்சம் மோசடி வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் நேற்று டெல்லியில் இருந்து அழைத்து வரப்பட்டு கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோவை,

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில் இடைத்தரகராக செயல்பட்டவர் சுகேஷ் (வயது 35). தற்போது இவர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர், கடந்த 2010-ம் ஆண்டில் கோவை கணபதி பகுதியை சேர்ந்த ராஜவேலு (40) என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, அவர் கர்நாடக மாநில முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறியதுடன், டெண்டர் எடுத்துக்கொடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இதற்காக ராஜவேலுவிடம் இருந்து ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் அந்த டெண்டரை எடுத்துக்கொடுக்கவில்லை.

அத்துடன் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்தார். இதுதொடர்பாக ராஜவேலு கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சுகேஷ் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய தந்தை சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் சென்றனர். இதுதொடர்பான வழக்கு கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணைக்கு சுகேசின் தந்தை சந்திரசேகர் மட்டும் ஆஜராகி வந்தார். சுகேஷ் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் இருந்த சுகேஷை போலீசார் கடந்த ஜூன் மாதம் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் (ஆகஸ்ட்) 17-ந்தேதி சுகேஷ் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜரானார். இதன் பின்னர் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதில் ஆஜர்படுத்து வதற்காக சுகேஷை பலத்த பாதுகாப்புடன் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் கோவைக்கு போலீசார் அழைத்து வந்தனர். காலை 5.55 மணிக்கு கோவைக்கு அழைத்து வரப்பட்ட சுகேஷ் பின்னர் பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன்பின்னர் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார், வருகிற 16-ந்தேதி மீண்டும் சுகேசை ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சுகேஷ் ரெயில் மூலமாக திகார் சிறைக்கு டெல்லி போலீசார் அழைத்து சென்றனர்.

Related Tags :
Next Story