ரூ.35 லட்சம் கடன் வாங்கியதால் கணவருடன் தகராறு 2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை
பெங்களூருவில், ரூ.35 லட்சம் கடன் வாங்கியதால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில், ரூ.35 லட்சம் கடன் வாங்கியதால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்பெங்களூரு அல்சூர் அருகே வசித்து வருபவர் ஹேமந்த்குமார். இவரது மனைவி ரேணுகா (வயது 34). இவர்களுக்கு 6 வயதில் நிஷிதா மற்றும் 10 மாதங்களே ஆன பவானி என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஹேமந்த்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனியார் மருத்துவமனையில் ஊழியராக ரேணுகா வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், வங்கிகளில் இருந்து ஹேமந்த்குமார் ரூ.35 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த பணத்தை அவர் தனது விருப்பப்படி செலவு செய்து வந்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக ஹேமந்த்குமாருக்கும், ரேணுகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதுபோல, நேற்று முன்தினமும் அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. பின்னர் ஹேமந்த்குமார் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
2 குழந்தைகள் கொன்று தற்கொலைஇந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரேணுகா திடீரென்று மகள் நிஷிதாவை முதலில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் தனது 10 மாத குழந்தை பவானியையும் சேலையில் தூக்கில் தொங்கவிட்டு கொன்றதுடன், அதே சேலையில் ரேணுகாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில், ரேணுகாவின் செல்போனுக்கு ஹேமந்த்குமார் பலமுறை தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ஹேமந்த்குமார் தனது உறவினர்களை தொடர்பு கொண்டு ரேணுகா செல்போனை எடுத்து பேசாதது பற்றி தெரிவித்தார். மேலும் வீட்டிற்கு சென்று பார்க்கும்படி உறவினர்களிடம் ஹேமந்த்குமார் கூறினார். உடனே அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது ரேணுகா, குழந்தைகள் நிஷிதா, பவானி ஆகிய 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
ரூ.35 லட்சம் கடன்இதுபற்றி அறிந்ததும் அல்சூர் போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், குழந்தைகளுக்கு பணம் எதுவும் சேமித்து வைக்காமல் ஹேமந்த்குமார் ரூ.35 லட்சம் கடன் வாங்கி இருந்ததால், அவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு ரேணுகா தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் அல்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.