கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் கீதா மகாதேவ பிரசாத் உள்பட 3 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு


கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் கீதா மகாதேவ பிரசாத் உள்பட 3 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 2 Sept 2017 3:30 AM IST (Updated: 2 Sept 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. கீதா மகாதேவ பிரசாத் உள்பட 3 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. கீதா மகாதேவ பிரசாத் உள்பட 3 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

3 இடங்கள் காலியானது

கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவின் மந்திரிசபையில் இடம் பெற்று இருந்த கூட்டுறவுத்துறை மந்திரி மகாதேவ பிரசாத் 6 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து செக்ஸ் புகாரில் சிக்கிய கலால்துறை மந்திரி எச்.ஒய்.மேட்டி பதவியை ராஜினாமா செய்தார். இறுதியாக போலீஸ் துறை மந்திரியாக பணியாற்றி வந்த பரமேஸ்வர் கட்சியின் கட்டளையை ஏற்று பதவி விலகினார். இதையடுத்து கர்நாடக மந்திரிசபையில் 3 இடங்கள் காலியானது.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2018) தேர்தல் நடைபெற இருப்பதால் மந்திரிசபையில் உள்ள காலி இடங்களை நிரப்ப சித்தராமையா முடிவு செய்தார். மந்திரி பதவியை கைப்பற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்தது. இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு இருந்த முடிவை சித்தராமையா தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

ஒப்புதல் பெற்றார்

இந்த நிலையில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது என சித்தராமையா தீர்மானித்தார். 3 காலி இடங்களை நிரப்புவதற்கான பெயர் பட்டியலுடன் சித்தராமையா கடந்த மாதம் டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து பேசி அதற்கு ஒப்புதல் பெற்றார். கடைசியாக மந்திரிசபை விரிவாக்கம் கடந்த ஆண்டு(2016) செப்டம்பர் மாதம் 5–ந் தேதி நடைபெற்றது. அப்போது மந்திரியாக கிருஷ்ணப்பா பதவி ஏற்றார்.

இந்த நிலையில் காலி இடங்களை நிரப்ப கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் 1–ந் தேதி(நேற்று) நடைபெறும் என்று சித்தராமையா அறிவித்தார். அதன்படி 3 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் நேற்று மாலை 5 மணிக்கு தேசிய கீத இசையுடன் தொடங்கியது. இதில் புதிய மந்திரிகளாக எச்.எம்.ரேவண்ணா, திம்மாபூர், கீதா மகாதேவ பிரசாத் ஆகியோர் பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இடைத்தேர்தலில்...

இந்த விழாவை தலைமை செயலாளர் சுபாஷ்சந்திர குந்தியா நடத்தினார். இதில் முதல்–மந்திரி சித்தராமையா, மந்திரிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த விழா 5.15 மணிக்கு நிறைவடைந்தது. புதிய மந்திரிகளுக்கு கவர்னர் வஜூபாய் வாலா, முதல்–மந்திரி சித்தராமையா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதிதாக பதவி ஏற்ற 3 மந்திரிகளில் எச்.எம்.ரேவண்ணா, திம்மாபூர் ஆகியோர் கேபினட் மந்திரிகளாகவும், கீதா மகாதேவ பிரசாத் தனி பொறுப்புடன் கூடிய இணை மந்திரியாகவும் பதவி ஏற்றனர். மாரடைப்பால் மரணம் அடைந்த மந்திரி மகாதேவ பிரசாத்தின் மனைவிதான் கீதா மகாதேவ பிரசாத் என்பதும், இவர் தனது கணவர் மறைவையொட்டி காலியான குண்டலுப்பேட்டை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

பெண் மந்திரிகளின் எண்ணிக்கை

புதிய மந்திரிகளாக பதவி ஏற்றவர்களில் எச்.எம்.ரேவண்ணா மற்றும் திம்மாபூர் ஆகிய இருவரும் எம்.எல்.சி.க்கள் ஆவார்கள். மேலும் கர்நாடக மந்திரிசபையில் கீதா மகாதேவ பிரசாத் இடம் பெற்று இருப்பதன் மூலம் பெண் மந்திரிகளின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

--–

(பாக்ஸ்) பதவி ஏற்பு விழாவை பரமேஸ்வர் புறக்கணித்தார்

3 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா பெங்களூரு ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. இதில் பெரும்பாலான மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆனால் காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் பங்கேற்காமல் விழாவை புறக்கணித்தார். கீதா மகாதேவ பிரசாத்துக்கு பதிலாக எம்.எல்.ஏ.க்கள் நரேந்திரசாமி அல்லது சடக்‌ஷரி ஆகிய இருவரில் ஒருவருக்கு மந்திரி வழங்குமாறு சித்தராமையாவிடம் பரமேஸ்வர் கோரினார். ஆனால் இதை சித்தராமையா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பரமேஸ்வர் இந்த பதவி ஏற்பு விழாவை புறக்கணித்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு

புதிய மந்திரிகளாக எச்.எம்.ரேவண்ணா, திம்மாபூர், கீதா மகாதேவ பிரசாத் ஆகியோர் நேற்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எச்.எம்.ரேவண்ணாவுக்கு போக்குவரத்து துறை, திம்மாபூருக்கு கலால் துறை, கீதா மகாதேவ பிரசாத்துக்கு சர்க்கரை, சிறிய தொழில்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சில மந்திரிகளின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை போக்குவரத்து துறையை கவனித்து வந்த மந்திரி ராமலிங்கரெட்டிக்கு போலீஸ் இலாகா வழங்கப்பட்டுள்ளது. சிறிய தொழில்கள் துறையை நிர்வகித்து வந்த மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கு கூட்டுறவுத்துறை வழங்கப்பட்டுள்ளது. மந்திரி சந்தோஷ் லாட்டுக்கு தொழிலாளர் நலத்துறையுடன் கூடுதலாக தொழில் பயிற்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இணை மந்திரிகளாக உள்ள பிரியங்க் கார்கே, பிரமோத் மத்வராஜ், ஈஸ்வர் கன்ட்ரே, ருத்ரப்பா லமானி ஆகியோருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.


Next Story