நதிகளை காக்க வலியுறுத்தி ஊட்டியில் மனித சங்கிலி
நதிகளை காக்க வலியுறுத்தி ஊட்டியில் நேற்று ஈஷா யோகா மையம் சார்பில் தன்னார்வ தொண்டர்களின் மனித சங்கிலி நடைபெற்றது.
ஊட்டி,
கோவையில் உள்ள ஈஷா யோகா மைய தலைவர் ஜக்கி வாசுதேவ் ‘நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்‘ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் நதிகளை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஈஷா யோகா மைய தன்னார்வ தொண்டர்கள் சார்பில் நதிகளை காக்க வலியுறுத்தி, ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று மனித சங்கிலி நடைபெற்றது. பின்னர் அவர்கள் ஊட்டியில் உள்ள ஏ.டி.சி. மணிக்கூண்டு, மாரியம்மன் கோவில் சந்திப்பு, கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் மற்றும் அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது குறித்து தன்னார்வ தொண்டர் விஜயா என்பவர் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. இதனால் விளைநிலங்களில் பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
எனவே, ஈஷா யோகா மையம் சார்பில் நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் என்ற திட்டத்தை வலியுறுத்தி ஊட்டியில் பள்ளி, கல்லூரி மாணவி–மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
நதிகளை காப்பதற்கு ஒவ்வொரு பொதுமக்களும் வாக்களிக்கலாம். அதன்படி, 8000980009 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் பொதுமக்கள் 10 கோடி பேர் அந்த எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தால், நதிகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கற்பூர மற்றும் சீகை மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, கற்பூர மற்றும் சீகை மரங்களை அகற்றி விட்டு சோலை மரங்களை நடுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.