சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தை மாணவர்கள் பார்வையிடலாம்


சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தை மாணவர்கள் பார்வையிடலாம்
x
தினத்தந்தி 2 Sept 2017 5:00 AM IST (Updated: 2 Sept 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தை உரிய முன்அனுமதி பெற்று பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிடலாம் என்று பயிற்சி மைய அதிகாரி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் போட்டித்தேர்வு மூலம் தேர்வாகும் ராணுவ அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடுதல் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ராணுவத்தில் பணியாற்றும்போது என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சியை முடித்தவர்கள் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

தற்போது 266 ஆண் அதிகாரிகளும், 31 பெண் அதிகாரிகளும், வெளிநாடுகளை சேர்ந்த 25 ராணுவ அதிகாரிகளும் இங்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீரில் நடந்த போரின்போது இறந்துபோன ராணுவ அதிகாரி சந்தோஷ் மகாதிக் என்பவரின் மனைவி சுவாதி மகாதிக், ராணுவ வீரர் மிஸ்ரா என்பவரின் மனைவி நிதி மிஸ்ரா ஆகியோரும் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்களது பயிற்சி காலம் வருகிற 9-ந் தேதியுடன் முடிகிறது. இங்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்து ஒரு அதிகாரி கூறியதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் எல்லை, இந்தியா-சீனா எல்லை போன்றவை எப்படி இருக்கும், எந்தெந்த பகுதிகளில் இருந்து அண்டை நாட்டைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்பது போன்றவற்றை வரைபடம் மூலம் தெளிவாக விளக்கி கூறுகிறோம். இங்குள்ள வரைபடத்தை போன்று தான் எல்லைகள் இருக்கும்.

எந்தெந்த பகுதிகளில் மலை உள்ளது, எங்கெங்கு நதிகள் ஓடுகின்றன என்பதையும் வரைபடம் மூலம் விளக்குகிறோம். அதுபோன்ற பகுதிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் விளக்கி கூறுகிறோம். இதன்மூலம் பயிற்சி முடித்தவர்கள் தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் சுலபமாக பணியை மேற்கொள்ள முடியும். இந்திய ராணுவத்தில் உள்ள அனைத்து அதிநவீன போர் எந்திரங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கிறோம்.

ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் ராணுவ அதிகாரிகளுக்கான போட்டித்தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்பு மிக குறைவாக உள்ளது. தமிழகத்தில் இருந்து ராணுவ வீரர்களாக அதிகம் பேர் சேருகின்றனர். ஆனால், அதிகாரிகளுக்கான தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம்.

மாணவ-மாணவிகள் படிப்பை முடித்தபின்பு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட அனுமதிக்கிறோம். இதற்கு சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் முறையாக முன்அனுமதி பெறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story