விவசாயிகள் வீடு திரும்ப தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தஞ்சையில் ஜி.கே.வாசன் பேட்டி


விவசாயிகள் வீடு திரும்ப தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தஞ்சையில் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 2 Sept 2017 4:00 AM IST (Updated: 2 Sept 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வீடு திரும்ப தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சையில் ஜி.கே.வாசன் கூறினார்.

தஞ்சாவூர்,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்தியஅரசு அறிவித்தது. கள்ளநோட்டுகளையும், கருப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாதிகளின் புழக்கத்தில் உள்ள நோட்டுகளை ஒழிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 3 மாதங்களாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மத்தியஅரசின் இந்த முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தோல்வியில் முடிந்து இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் உயரும் என்று தெரிவித்தனர். ஆனால் 5.7 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் நம்மோடு போட்டி போடும் பல நாடுகள் கூட பொருளாதார ரீதியில் நம்மைவிட வளர்ச்சி அடைந்துள்ளன.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என மேற்கொண்ட நடவடிக்கையின் தாக்கம் குறித்து பிரதமர், நிதி மந்திரி ஆகியோர் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அரசு பள்ளிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்று நிதி ஆயோக் யோசனை தெரிவித்தது ஏற்புடையதல்ல. இது தவறான யோசனை. இதில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் உள்ளனர். மாநில, மாவட்ட தலைநகரங்கள், நகராட்சிகளுக்கு நிதி ஆயோக் நேரில் சென்று உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். கண்மூடித்தனமாக முடிவு எடுக்கக்கூடாது. வாகனம் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறானது. இது 1 சதவீதம் சாதகம் என்றால் 99 சதவீதம் பாதகமாக தான் இருக்கும்.

அசல் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புக் போன்ற ஆவணங்கள் கையில் இருப்பதால் விபத்து குறையும் என்று கூறுவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஆவணங்கள் காணாமல் போனால் 24 மணிநேரத்தில் அந்தந்த துறையால் கொடுக்க முடியுமா? முடியாது. கண்மூடித்தனமான முடிவுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்காது. புளுவேல் கேம் எனப்படும் நீல திமிங்கலம் விளையாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும். இதுவரை தடை செய்யாதது மத்திய, மாநில அரசுகளின் தவறு. விதிமுறைகளை மீறி ஆற்றில் மணல் அள்ளப்படு கிறது. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்புடன் செயல்பட வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள், ஆளும் கட்சியில் கருத்து வேறுபாடுடைய எம்.எல்.ஏ.க்கள், தமிழக கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ள உண்மை நிலையை மக்களிடம் கவர்னர் தெளிவுபடுத்த வேண்டும். நாங்கள் ஆளும் கட்சியுடனும், எதிர்க்கட்சிகளுடனும் கூட்டணியில் இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கமல்ஹாசன் மட்டுமின்றி எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்சி தொடங்குவதற்கும், கருத்து கூறுவதற்கும் ஜனநாயகத்தில் உரிமை உண்டு. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை மத்திய அரசு பாராமுகமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.

தமிழகஅரசு அமைச்சர்கள் குழுவை டெல்லிக்கு அனுப்பி டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story