கொட்டியது மழை; குளிர்ந்தது புதுவை


கொட்டியது மழை; குளிர்ந்தது புதுவை
x
தினத்தந்தி 2 Sept 2017 5:00 AM IST (Updated: 2 Sept 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நேற்று பகலில் பலத்த மழை கொட்டியது. இதனால் பூமி குளிர்ந்தது.

புதுச்சேரி,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும் சென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் புதுவையில் நேற்று அதிகாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8.30 மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் மழை பெய்யத்தொடங்கியது. பலத்த காற்று வீசியதால் மறைமலை அடிகள் சாலை, மற்றும் ஓரிரு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காலையில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் சிலர் கைகளில் குடைகளை பிடித்த படியும், சிலர் மழைக்கோர்ட்டு அணிந்த படியும் சென்றனர். ஒரு சிலர் மழையில் நனைந்த படியே பள்ளிக்கு சென்றனர். புதுவை பஸ்நிலைய பகுதி,பூமியான்பேட்டை, நயினார்மண்டபம் மூகாம்பிகை நகரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இந்த மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே சென்றனர். இந்த மழை சுமார் 10.30 மணி வரை நீடித்தது.

நேற்று காலையில் கடல்சீற்றம் அதிகமாக இருந்தது. பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி மீனவர்களை பயமுறுத்தின. இதன் காரணமாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலரும் பாதி வழியிலேயே திரும்பினார்கள். புதுவை கடற்கரையில் அலை கரையோரம் கொட்டப்பட்டிருந்த பாறாங்கற்களில் மோதி வெளியில் தெறித்தது. இதனால் புதுவை கடற்கரையில் புகைமூட்டம் போன்ற நிலை காணப்பட்டது.

சாலைகள், கால்வாய்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.பொதுப்பணித்துறை ஊழியர்கள் சாக்கடை கால்வாயில் அடைப்புகளை சரி செய்தனர். புதுவை நகர் பகுதியில் ஆங்காங்கே மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

தொடர் மழையால் பூமி குளிர்ந்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் இதமான குளிர்ந்த காற்று வீசியது. 

Next Story