திருச்சியில் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களிடம் போலீசார் அதிரடி சோதனை


திருச்சியில் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களிடம் போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 2 Sept 2017 4:45 AM IST (Updated: 2 Sept 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களிடம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி விரட்டி பிடித்து அபராதம் விதித்தனர்.

திருச்சி,

விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காகவும், சீரான வாகனபோக்குவரத்திற்காகவும் தமிழகத்தில் கார், வேன், ஆட்டோ, லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை (ஒரிஜினல் டிரைவிங் லைசென்சு) வைத்திருக்க வேண்டும், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு செப்டம்பர் 1-ந்தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.

இந்த அறிவிப்பின்படி திருச்சி நகரில் போலீசார் நேற்று அதிரடி வாகன சோதனையில் இறங்கினார்கள். திருச்சி தலைமை தபால் அலுவலக ரவுண்டானா, கே.கே.நகர், மெயின்கார்டு கேட், உறையூர் உள்படமுக்கிய இடங்களில் நின்று கொண்டிருந்த போலீசார் வாகனங்களில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி ஓட்டுனர்உரிமத்தை கேட்டனர். ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களுக்கு அரசு உத்தரவுப்படி தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அந்தந்த இடத்திலேயே போலீசார் கையடக்க கணினி மூலம் அபராத தொகையை வசூல் செய்து அதற்கான ரசீதை கொடுத்தனர்.

பல இடங்களில் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்துவதும், போலீஸ் தடுப்பையும் மீறி வாகன ஓட்டுனர்கள் வேகமாக செல்வதும் போலீசார் அவர்களை விரட்டி பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவதுமாக இருந்தது. இதனால் சில இடங்களில் போலீசாருக்கும், வாகனம் ஓட்டி சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் போலீசாரிடம் சிக்கி கொண்டவர்களில் பலர் அரசு லைசென்சு எடுப்பதற்கு உரிய கால அவகாசம் கொடுத்திருக்கவேண்டும் என கூறி சென்றனர்.

போலீசார் முக்கிய இடங்களில் நின்று கொண்டு வாகன சோதனை நடத்தியதால் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள், இதுவரை ஓட்டுனர் உரிமம் எடுக்காதவர்கள் போலீசாருக்கு பயந்து நேற்று இருசக்கர வாகனம் ஓட்டுவதையே தவிர்த்தனர். இதனால் திருச்சியில் உள்ள சாலைகளில் நேற்று இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. அதே நேரத்தில் டவுண் பஸ்களில் அதிக கூட்ட நெரிசல் காணப்பட்டது.

ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் பழகுனர் உரிமம் (எல்.எல்ஆர்) எடுப்பதற்காக பிராட்டியூர்,ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்றனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேற்று கூட்டம் அலைமோதியது. ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் தரகர்கள் மூலம் பலர் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்தனர்.

Next Story