144 தடை உத்தரவு காரணமாக புதுக்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


144 தடை உத்தரவு காரணமாக புதுக்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 2 Sept 2017 3:24 AM IST (Updated: 2 Sept 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

144 தடை உத்தரவு காரணமாக நேற்று புதுக்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் காந்தி பூங்கா அருகே உள்ள அண்ணா சிலை ஆகியவற்றிற்கு அ.தி.மு.க. அம்மா அணி மாவட்ட செயலாளர் வைரமுத்து, தினகரனால் அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பரணி கார்த்திக்கேயன் ஆகியோர் ஒரே நேரத்தில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருந்தனர்.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலும், அண்ணா சிலை பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுரு தலைமையிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த பாதுகாப்பு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ ஆகியோர் நேரில் பார்வையிட்டு போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

இதனால் நேற்று எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணாசிலை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. எம்.ஜி.ஆர். சிலைக்கு தினமும் காலையில் அ.தி.மு.க. நிர்வாகி சுசிந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார். இவர் நேற்றும் வழக்கம்போல் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் நேற்று மாலை 6 மணியுடன் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

Next Story