ஆபத்து நிறைந்த ‘புளூவேல்’ விளையாட்டை தூண்டுவோர் மீது நடவடிக்கை கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை


ஆபத்து நிறைந்த ‘புளூவேல்’ விளையாட்டை தூண்டுவோர் மீது நடவடிக்கை கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Sept 2017 4:30 AM IST (Updated: 2 Sept 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

ஆபத்து நிறைந்த ‘புளுவேல்‘ விளையாட்டை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி எச்சரித்தார்.

சேலம்,

இணையதளம் மூலம் ‘புளூவேல்‘ என்ற விளையாட்டினால் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆபத்தையும், விபரீதத்தையும் ஏற்படுத்தக்கூடிய புளூவேல் விளையாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

இணையதளம் மூலம் விளையாடப்படும் புளூவேல் விளையாட்டு உயிரை பறிக்கக் கூடியதாக திகழ்கிறது. குறிப்பாக 12 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இவ்விளை யாட்டில் அடிமையாகி தங்கள் உயிரை மாய்த்து கொள்வதாக செய்திகள் வெளியாகிறது. ஆர்வத்தை தூண்டி இறுதியாக தற்கொலை செய்து கொள்ள கட்டளை கொடுக்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 8 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புளூவேல் விளையாட்டுக்கு எதிரான விழிப்புணர்வினை அதிக அளவில் ஏற்படுத்துவதன் மூலம் தீங்கான விளைவுகளை சந்திப்பதற்கு முன் இதிலிருந்து விடுபட வாய்ப்பாக அமையும். இதற்கென மாவட்ட அளவில் காவல்துறையின் சைபர் கிரைம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மனநல மருத்துவர் ஆகியோரை கொண்டு குழு அமைத்து கண்காணித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் எப்போதும் ‘ஸ்மார்ட்போன்‘ மூலம் இணையதளத்தை பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் வீட்டில் எப்போதும் தனிமையாக இருக்கும் குழந்தைகளை நன்கு கண்காணிக்க வேண்டும். குறிப்பாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியம். இந்த விளையாட்டினை தூண்டிவிடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், குழந்தைகளுடன் நன்கு உரையாடி மாறுதல் காணப்படும் குழந்தைகளை கண்டறிந்து கவுன்சிலிங் வழங்குபவர்களை கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி அளவில் மாணவ, மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வினை ஏற்பத்திட துறை அலுவலர்களுக்கு உரிய தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட அளவில் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்கிட மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு 0427-2415966 என்ற தொலைபேசிக்கும், குழந்தைகள் நலன் குறித்த எல்லா விதமான சந்தேகங்களுக்கும் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கும், போலீசாரிடம் புகார் அளிக்க 100 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story