சிறுபாசன குளங்களை தூர்வாரும் பணி கலெக்டர் விவேகானந்தன் தகவல்


சிறுபாசன குளங்களை தூர்வாரும் பணி கலெக்டர் விவேகானந்தன் தகவல்
x
தினத்தந்தி 2 Sept 2017 4:09 AM IST (Updated: 2 Sept 2017 4:09 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் தாய் திட்டத்தின் கீழ் ரூ. 8.66 கோடி மதிப்பில் சிறுபாசன குளங்களை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் விவேகானந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அம்மா பூங்கா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அம்மா உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் ஏ.கொல்லஅள்ளி, வெள்ளோலை ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தொழிலாளர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வை தொடர்ந்து கலெக்டர் விவேகானந்தன் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் வெண்ணாம்பட்டி, ஏ.ஜெட்டி அள்ளி உள்பட 10 ஊராட்சிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் சுற்றுச்சுவருடன் கூடிய குழந்தைகள் விளையாடும் பூங்கா விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நடைபாதையுடன் அமைக்கப்படுகிறது.

இதேபோல் 10 இடங்களில் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அம்மா உடற்பயிற்சி கூடம் பிரத்யேகமான உடற்பயிற்சி உபகரணங்களுடன் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவு பெற்ற பின் இவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் 405 இடங்களில் கால்வாய்கள் தூர்வாரும் பணி, அங்கன்வாடி கட்டிட பணி, உரக்குழிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல் தாய் திட்டத்தின் கீழ் ரூ.8.66 கோடி மதிப்பில் 45 சிறுபாசன குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், அமரவேல், ஜெயந்தி, கவுரி, ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர்கள் பாலாஜி, சீனிவாச பிரபு மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

Next Story