இளம் பஞ்சாயத்து தலைவி..!


இளம் பஞ்சாயத்து தலைவி..!
x
தினத்தந்தி 2 Sept 2017 2:00 PM IST (Updated: 2 Sept 2017 12:22 PM IST)
t-max-icont-min-icon

இமாச்சல பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தர்ஜூன் என்ற கிராமம் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது.

மாச்சல பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தர்ஜூன் என்ற கிராமம் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. மலை கிராமமான தர்ஜூனில் பஞ்சாயத்து தேர்தல் எப்போதுமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும். கடந்த முறை நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் கல்லூரி மாணவி, பஞ்சாயத்து தலைவியாக தேர்ந்தெடுக் கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 24. இந்த முறை நடைபெற்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 22 வயதே நிரம்பப்பெற்ற இளம் பெண் ஒருவர் பஞ்சாயத்து தலைவியாக தேர்வாகி இருக்கிறார். அவரது பெயர் ஜப்னா சவுஹானால். இவரே மிக குறைந்த வயதில் பஞ்சாயத்து தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர். ஏழ்மையான பின்னணியில் பிறந்து வளர்ந்த ஜப்னா.. பஞ்சாயத்து தலைவி என்ற அந்தஸ்தில் தனது கிராம மக்களின் நலனுக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

“இமாச்சல பிரதேசம் முழுக்க மலை கிராமங்கள்தான். கம்பளி மலை ஆடுகளை வளர்ப்பதும், அதை பராமரிப்பதுமே மலை கிராம பெண்களின் வேலை. சிலர் தேயிலை தோட்டங் களில் வேலை செய்கிறார்கள். பலர் இலைகளை காயவைத்து புகையிலை சுருட்டுகிறார்கள். இப்படியே மலைகிராம பெண்களின் வாழ்க்கை கழிகிறது. மூன்று வேளை சாப்பாட்டிற்கே அவதிப்படும் நிலையில் பள்ளி, கல்லூரி படிப்புகளை எதிர்பார்க்க முடியாது. ஒருசில குடும்பங்களில் மட்டும் பெண்களை படிக்க வைக் கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. படித்த பெண்கள், மலைகிராம சமுதாயத்தை நன்றாக வழி நடத்துவார்கள் என்ற எண்ணத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கல்லூரி மாணவிகளை வெற்றிபெற செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே ஒருசில மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம்” என்பவர் பஞ்சாயத்து தலைவி என்ற முறையில் அதிரடியாக சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்.

“இந்த திட்டத்தை என்னுடைய அப்பாவும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஏனெனில் மலை கிராமத்திற்குள் யாரும் மது அருந்தக்கூடாது, புகைப்பிடிக்கக்கூடாது என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறோம். ஆரம்பத்தில் ஆண்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. நான்கு நாட்கள் கிராமத்தை விட்டு வெளியேறி எதிர்ப்பை பதிவுசெய்தனர். இருப்பினும் என்னுடைய அறிவிப்பில் நான் உறுதியாக இருந்தேன். ஊர் மக்களோடு சேர்த்து என்னுடைய அப்பாவையும் நான்கு நாட்கள் பிரிந்து இருந்தேன். அதற்குள் கோபம் தணிந்துவிட ஊருக்கு திரும்பிவிட்டனர். இன்று தர்ஜூன் கிராமத்தில் மது பாட்டில், சிகரெட் பாக்கெட்டுகளுக்கு இடமே இல்லை. அந்தளவிற்கு கட்டுக்கோப்பாக வாழ்கிறார்கள்” என்று பெருமைப்படும் இந்த இளம் பஞ்சாயத்து தலைவி... இதுபோன்ற பல அதிரடி திட்டங்களை ஒன்றின் பின் ஒன்றாக செயல்படுத்த இருக்கிறார்.

“நான் கல்லூரி மாணவியாக இருந்தபோதே தனியார் தொலைக்காட்சியின் செய்தி சேகரிப்பாளராக பணியாற்றினேன். மலை கிராமவாசிகளை அடையாளப்படுத்துவது, சமூக கருத்துகளை மலை கிராமங்களில் உட்புகுத்துவது என சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவேன். ஏனெனில் வீட்டையும், சமூகத்தையும் பிரித்து பார்க்க முடியாது. இன்று வீட்டில் நடப்பது நாளை சமூகத்தில் நடக்கலாம். அதேசமயம் இன்று சமூகத்தில் நடப்பது நாளை வீடு வரை நுழையலாம்... என்பதால் சமூக பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே களைந்துவிட முயல்கிறேன். போதை பொருட்களை தடை செய்ததற்கு அடுத்தபடியாக பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம். வீட்டிற்கு ஒருவரையாவது பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற திட்டத்தில் உறுதியாக இருக்கிறோம். இதனை வரவிருக்கும் தீபாவளிக்கு பிறகு நடைமுறைப்படுத்துவோம். மேலும் மலை கிராமங்களில் இருக்கும் ஓரிரு மூடநம்பிக்கைகளுக்கும் முழுக்குப்போட இருக்கிறோம்” என்று துணிச்சலாக பேசும் ஜப்னாவை சில தேசிய அமைப்புகள் மது ஒழிப்பிற்கான தூதுவராக அறிவித்திருக்கிறார்கள். இவருடைய அதிரடி செயல்பாடுகளுக்கு மாநிலம் கடந்தும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. குஜராத், ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடை பெறும் தேசிய கருத்தரங்குகளில் சிறப்பு விருந்தினராகவும் கவுரவிக்கப்படுகிறார்.

“சர்வதேச மகளிர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்டேன். முதல்-அமைச்சர்கள், மத்திய மந்திரிகள் என பாராட்டு மழை பொழிந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் எனக்கும், என்னுடைய கிராம பெண்களுக்கும் பாராட்டு மட்டும் போதாது. அதற்கு பதிலாக பொருளாதார உதவிகளையும், கல்வி உதவி தொகைகளையும் எதிர்பார்க்கிறோம். பஞ்சாயத்து தலைவி என்ற பொறுப்பில் இந்தியாவின் செல்வசெழிப்பான நகரங்களில் கருத்தரங்கம் நடத்தி தர்ஜூன் கிராமத்திற்காக உதவிகளை திரட்டி வருகிறேன். என்னுடைய பதவி காலம் முடிந்தாலும் உதவிகளை திரட்டுவேன். கிராமத்தை நல்வழிப்படுத்துவேன். எனக்குள் இருந்த சமூக பொறுப்பை பஞ்சாயத்து தலைவி என்ற பதவி கிளர்ந்துவிட்டிருக்கிறது. அதை இனி நல்லமுறையில் பயன் படுத்தி கொள்வேன்” என்று நம்பிக்கை வரிகளை தெறிக்கவிடும் ஜப்னா..., தர்ஜூன் என்ற பெயரில் சமூக அமைப்பையும் நடத்தி வருகிறார்.

அவரது நம்பிக்கை நிஜமாக வாழ்த்துவோம்..!

Next Story