கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகே டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு பெண்கள் முற்றுகை


கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகே டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Sept 2017 4:15 AM IST (Updated: 2 Sept 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நேற்று டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் டாஸ்கடையை அதிகாரிகள் மூடினர்.

கோவை,

இந்தியா முழுவதும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி கோவையில் சுமார் 190 கடைகள் மூடப்பட்டன. இதில் கோவை பாப்பநாயக்கன்பாளையம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடையும் அடங்கும்.

இதனிடையே மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகளை மீண்டும் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறப்பதற்காக நேற்று முன்தினம் இரவு அங்கு மதுபாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்கள் இறக்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு மூடப்பட்ட டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மீண்டும் திறந்தனர். இதுகுறித்த தகவல் பரவியதும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். பின்னர் கடைக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, இந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் கோவில்கள், பள்ளிகள் உள்ளன. மேலும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளது. இந்த கடையை மூட வேண்டும் என்று நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானக்கடை மூடப்பட்டது.

தற்போது மீண்டும் இந்த கடையை அதிகாரிகள் திறந்து உள்ளனர். இதனால் கோவிலுக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த கடையை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கூறினர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் டாஸ்மாக் கடையை மூடியதோடு, மீண்டும் திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story