மாவட்டம் முழுவதும் மூடப்பட்ட 36 மதுக்கடைகள் மீண்டும் திறப்பு


மாவட்டம் முழுவதும் மூடப்பட்ட 36 மதுக்கடைகள் மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 3 Sept 2017 4:00 AM IST (Updated: 3 Sept 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் மூடப்பட்ட 36 அரசு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

திண்டுக்கல்,

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் மதுக்கடைகளை மூடும்படி, கடந்த மார்ச் 31–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 800 அரசு மதுக்கடைகள் மூடப்பட்டன. அவை தவிர 1,183 மதுக்கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் சில திருத்தங்களை செய்தது. அதில் நகரங்களுக்கு இடையே இருக்கும் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடச்சொல்லவில்லை என்றும், 20 ஆயிரத்துக்கு குறைவான மக்கள்தொகை இருக்கும் பகுதிகளுக்கு அருகேயுள்ள நெடுஞ்சாலைகளில் இருந்து 220 மீட்டர் தூரத்தில் இருக்கும் மதுக்கடைகளை மூடினாலே போதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மூடப்பட்ட அரசு மதுக்கடைகள் பல திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் 31–ந்தேதி வரை, 160 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, 100–க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன. பின்னர் பல மதுக்கடைகள் வேறு இடத்தில் புதிதாக திறக்கப்பட்டன. சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

இதனால் மாவட்டம் முழுவதும் 76 மதுக்கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் திருத்தம் செய்ததை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் மூடப்பட்ட கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி ஏற்கனவே மூடப்பட்ட 36 மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் 3 நகராட்சிகளில் 12 மதுக்கடைகளும், 23 பேரூராட்சிகளில் 11 மதுக்கடைகளும், ஊராட்சி பகுதிகளில் 13 மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.


Next Story