அனிதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


அனிதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 3 Sept 2017 6:30 AM IST (Updated: 3 Sept 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

அனிதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 ஆழ்குழாய் கிணறுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த மாதம் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் புலிப்பாண்டியன் தெரு மற்றும் வ.உ.சி. தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வினை பல்வேறு மாநிலங்கள் ஏற்று கொண்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு விதிவிலக்கு பெறுவதற்கு முதல்–அமைச்சர் உள்பட துறை அமைச்சர்கள் அனைவரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி விலக்கு பெற முடியவில்லை.

அனிதா என்ற மாணவியின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இதுபோன்று செயல்களில் மாணவர்கள் ஈடுபட கூடாது. மாணவர்கள் முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம். மாணவர்களுக்கு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நீட் தேர்விற்கு பயிற்சி வழங்குவதற்காக பல கோடி ரூபாய் செலவில் பயிற்சி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story