சென்னை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பரிதாப சாவு


சென்னை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பரிதாப சாவு
x
தினத்தந்தி 3 Sept 2017 4:00 AM IST (Updated: 3 Sept 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சென்னை,

தவறான சிகிச்சையே குழந்தை உயிரிழப்பிற்கு காரணம் எனக்கூறி டாக்டர்கள் மீது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து குழந்தையின் உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணாநகர் நடுவங்கரை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(வயது 26). கூலி தொழிலாளி. அவரது மனைவி பிரியங்கா(24). நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த மாதம் 31-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் முதல் பிரசவத்திற்காக செனாய்நகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நேற்று முன்தினம் இரவு குழந்தை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தை இறந்ததை தொடர்ந்து குழந்தையின் உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியமே குழந்தை இறப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி செனாய் நகர் அரசு மகப்பேறு மருத்துவமனையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

இறந்த குழந்தையின் தந்தையான பாலாஜி அமைந்தகரை போலீசில் செனாய் நகர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது புகார் கொடுத்தார்.

அதில், நான் என் மனைவி பிரியங்காவை பிரசவத்திற்காக செனாய் நகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தேன்.
அப்போது மருத்துவமனையில் சேம்லா என்ற ஒரு மருத்துவரும் 2 செவிலியர்களும் பணியில் இருந்தனர். அவர்களும் வேறு ஒருவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர். அதனால் எனது மனைவிக்கு பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லை. சிறிது நேரத்திற்கு பிறகு அந்த மருத்துவர் வந்து, எனது அனுமதி இல்லாமல் என் மனைவிக்கு ஆபரேஷன் செய்தார். ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் பிறந்த 2 மணி நேரத்திலே குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு என் குழந்தை இறந்தது விட்டது. என் குழந்தை இறப்பிற்கு காரணம் செனாய் நகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாததும், சரியான சிகிச்சை அளிக்காததும் தான் காரணம்.

எனவே முறையான சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என அதில் தெரிவித்து உள்ளார்.
இந்த புகார் குறித்து அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story