திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி


திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 3 Sept 2017 5:45 AM IST (Updated: 3 Sept 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலியானார்கள்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள பரனூர்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் தனுஷ்(வயது 9). இவன் மேலகொண்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் ஏழுமலை(11), அருள்செல்வன் மகன் மதன்(12) ஆவார்கள். இவர்களில் ஏழுமலை 6-ம் வகுப்பும், மதன் 7-ம் வகுப்பும் வி.புத்தூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் தனுஷ், தனது நண்பர்களான ஏழுமலை, மதன் ஆகியோருடன் கீழகொண்டூர் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றான். ஆற்றில் ஏற்கனவே பள்ளம் தோண்டப்பட்டிருந்த இடத்தில், சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நின்று இருந்தது. உடனே 3 பேரும், தங்கள் ஆடைகளை கழற்றி கரையோரத்தில் வைத்துவிட்டு குளித்தனர். ஆழமான பகுதிக்கு சென்றதால், 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

இதனிடையே இரவு 8 மணியாகியும் 3 பேரும் அவர்களது வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் இவர்களது பெற்றோர் கிராமத்தில் பல இடத்தில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவர்கள் பற்றி தகவல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஆற்றங்கரை பகுதிக்கு சென்று பார்த்த போது, அங்கு கரையில் 3 பேரும் அணிந்திருந்த ஆடைகள் கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர்களது பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் ஆற்றில் பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் இறங்கி தேடினர்.

அப்போது தனுஷ், ஏழுமலை, மதன் ஆகியோரது உடல் பிணமாக மீட்கப்பட்டது. கரையோரத்தில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் உடல்களை பார்த்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரத்தினசபாபதி, கண்டாச்சிப்புரம் மண்டல துணை தாசில்தார் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து 3 பேரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பரனூர்சத்திரம் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. 

Next Story