எம்.எல்.ஏ.க்கள் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை: ஓரிரு நாட்களுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை


எம்.எல்.ஏ.க்கள் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை: ஓரிரு நாட்களுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Sept 2017 7:30 AM IST (Updated: 3 Sept 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏ.க்கள் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக உள்ளனர். ஓரிரு நாட்களுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

புதுச்சேரி,

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் புதுவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

நாங்கள் அமர வைத்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் செய்துவிட்டார். அதே போன்று கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு வெளியே சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணி சேர்த்துக்கொண்டனர். தற்போது அவருக்கு துணை முதல்–அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் துரோகமும், குரோதமும் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

கட்சிக்கு துரோகம் செய்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எப்படி மக்களுக்கு நல்லது செய்வார். இதனால் தான் எங்களின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்–அமைச்சரை மாற்ற வேண்டும் என கூறி வருகின்றனர்.

தங்கள் சுயநலத்திற்காகவோ, சுயலாபத்துக்காகவோ எம்.எல்.ஏ.க்கள் இங்கு தங்கி இருக்கவில்லை. கட்சியை காப்பாற்ற வேண்டும். துரோகத்தை ஒழித்து ஒரு நல்ல தலைமையை உருவாக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தையும், தொகுதியையும் விட்டு விட்டு இங்கே வந்து தங்கி உள்ளனர். அதனால் தான் அனைவரும் ஒற்றுமையாக இவ்வளவு நாட்கள் தங்கி இருந்து வருகின்றனர். அவர்களை யாரும் இங்கே அடைத்து வைக்கவில்லை.

எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதால் சமாதானம் செய்வதற்காக தான் வந்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்காக நான்வரவில்லை. தினமும் அவர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறேன். கடந்த நான்கு ஐந்து நாட்களாகவே அவர்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை. தற்போது வந்துள்ளேன். எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாகத்தான் இங்கே தங்கி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் கவர்னரும், ஜனாதிபதியும் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் எம்.எல்.ஏ.க்கள் இங்கு தங்கி இருக்கிறார்கள். இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருப்போம். அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். எப்படிப்பட்ட நடவடிக்கை என்பது பற்றி தற்போது சொல்ல முடியாது.

இங்கு தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களில் ஜெயந்தி, உமாமகேஷ்வரி ஆகியோர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

வெற்றிவேல் சென்னையில் உள்ளார். அதே போன்று சுந்தர்ராஜ் வீட்டு திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். தொகுதி மக்களை சந்திக்க வேண்டும் என்ற ஒரே ஒரு குறை தான் எம்.எல்.ஏ.க்களிடம் உள்ளது. இருந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இங்கு தங்கி இருப்பது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இதனை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

நீட் விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் பதவி விலகினால் போதாது. முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் பதவி விலகினால் போதும். அனைத்தையும் நாங்கள் சரி செய்துவிடுவோம்.

மாணவி அனிதா பிளஸ்–2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வு இல்லை என்றால் அவருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். இந்தியா முழுவதும் நீட் என்ற பெயரில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறப்பான பாடத்திட்டம் உள்ளது. எனவே தமிழக மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு இருந்திருந்தால் அந்த மாணவிக்கு இடம் கிடைத்திருக்கும். அப்படி இருந்திருந்தால் அனிதாவின் அகால மரணம் நடந்திருக்காது. நீட் தேர்வு என்பது தமிழகத்துக்கு தேவை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தினகரன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–

கேள்வி:– தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்வீர்களா?

பதில்:– அவர் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவர்.

கேள்வி:– பொதுக்குழு கூட்டுவீர்களா?

பதில்:– தேவைப்படும் போது கூட்டப்படும். பொதுச்செயலாளர் எப்போது முடிவு செய்து கூறுகிறாரோ அப்போது கூட்டப்படும். அவர்கள் கூட்டுவது பொதுக்குழுவே இல்லை. 4 பேரை வைத்து நடத்துகிற கூட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story