மாணவி அனிதா தற்கொலை: ‘நீட்’ தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மாணவி அனிதா தற்கொலை: ‘நீட்’ தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2017 4:00 AM IST (Updated: 3 Sept 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாணவி தற்கொலையை அடுத்து ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கரூரில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மாணவி அனிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கரூர்,

‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த மாணவி அனிதா (வயது 17) நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் அனிதா தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாணவி அனிதா மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கரூரில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது. பின்னர், ‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர் பஸ் நிலையம் அருகே ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் சுப்ரமணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜவகர் பஜாரில் காமராஜர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அனிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அனிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது நீட்தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலை முன்பு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் அனிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு மனோகரா கார்னர் ரவுண்டானாவை சுற்றி ஊர்வலமாக சென்று காமராஜர் சிலை முன்பு வந்தடைந்தனர். அப்போது தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராகவும், ‘நீட்’ தேர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். புரட்சிகர மாணவர் அமைப்பு சார்பில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

வெங்ககல்பட்டியில் திருமாநகர் பொதுமக்கள் மற்றும் கரூர் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அனிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story