பாப்பாரப்பட்டியில் 1,500 மாணவ-மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி


பாப்பாரப்பட்டியில் 1,500 மாணவ-மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 3 Sept 2017 4:21 AM IST (Updated: 3 Sept 2017 4:21 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டியில் 1,500 மாணவ-மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை கலெக்டர் விவேகானந்தன் தொடங்கி வைத்தார்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான 45-வது ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணியசிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 250 பள்ளிகளை சேர்ந்த 1,500 மாணவ-மாணவிகள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு அவர்கள் உருவாக்கிய 426 அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.

இந்த கண்காட்சியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் ஒரு பிரிவாகவும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவிகள் மற்றொரு பிரிவாகவும் தங்கள் படைப்புகளை உருவாக்கி பார்வைக்கு வைத்திருந்தனர். இந்த அறிவியல் கண்காட்சியை கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ-மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடு குறித்த விளக்கங்களை மாணவ-மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த அறிவியல் கண்காட்சியில் அறிவியல் அரங்கம், தொன்மை அரங்கம், கலைபண்பாட்டு மன்றம், கணிதமன்றம், மூலிகை தோட்டம் மற்றும் விலங்கியல் அரங்கம் என பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த அரங்குகளை மாவட்டம் முழுவதும் இருந்து வந்த 8,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த கண்காட்சியில் முதல் பரிசு பெற்ற அறிவியல் படைப்புகள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தகுதிபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சபியுல்லா கான், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பழனிசாமி, இடைநிலை கல்வி உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சீனிவாசன், நாட்டுநலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் இளங்கோ, பள்ளி தலைமை ஆசிரியர் மணி, உதவி தலைமை ஆசிரியர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ஜலேந்திரன், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக மாக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் சேலம் பாராமகால் நாணயவியல் சங்கம் இணைந்து நடத்திய பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்கள், ஓலைச்சுவடிகள், பழங்கால அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பண்டையகாலத்தில் உள்ள ஏறுதழுவுதல் காட்சி, காளை மாடு உருவங்கள் பொறித்த நாணயங்கள் உள்ளிட்ட அரிய வகை பொருட்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றின் வரலாற்று பின்னணி குறித்த தகவல்களை தலைமை ஆசிரியர் கருணாகரன், உதவி தலைமை ஆசிரியர் அருள், நாணயவியல் சங்க நிர்வாகி சுல்தான் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு விளக்கினார்கள்.

Next Story