தமிழக அரசு அறிவித்த நிதியுதவியை அனிதா குடும்பத்தினர் வாங்க மறுப்பு கலெக்டர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது


தமிழக அரசு அறிவித்த நிதியுதவியை அனிதா குடும்பத்தினர் வாங்க மறுப்பு கலெக்டர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது
x
தினத்தந்தி 3 Sept 2017 4:45 AM IST (Updated: 3 Sept 2017 11:17 PM IST)
t-max-icont-min-icon

தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.7 லட்சம் நிதியுதவியை அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்து விட்டனர்.

செந்துறை,

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா (வயது 17) கடந்த 1–ந்தேதி மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தநிலையில் அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் தமிழக அரசின் சார்பில் நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவு மாணவி அனிதாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது பிரிவால் தந்தை சண்முகம் மற்றும் சகோதரர்கள் மணிரத்னம், சதீஷ்குமார், பாண்டியன், அருண்குமார் ஆகியோர் சொல்லமுடியாத துயரத்தில் மூழ்கினர். அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் குழுமூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உள்பட அதிகாரிகள் வந்தனர். பின்னர் அவர்கள் அரசு சார்பில் அனிதாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். மேலும் அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிதிக்கான காசோலையை அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர்களிடையே கலெக்டர் கொடுத்தார். ஆனால் அதனை அவர்கள் வாங்க மறுத்து விட்டனர்.

அப்போது அனிதாவின் சகோதரர் மணிரத்னம் உள்ளிட்டோர் கூறுகையில், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மருத்துவ கனவு தகர்ந்ததை எண்ணி தான் எனது தங்கை உயிரை மாய்த்து இருக்கிறார். நீட் தேர்வை நடைமுறைப்படுத்திய இரு அரசுகள் தான் ஒரு வகையில் காரணமாய் இருக்கின்றன. எனவே இந்த தொகையை நாங்கள் வாங்கினால் அது தங்கை அனிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்தும்படியாக மாறிவிடும். நீட் தேர்வினை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் இந்த நிதியை பெற்று கொள்கிறோம் என உருக்கமாக கூறினர்.

எனினும் நிதியை வாங்கி கொள்ளுமாறு சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். அனிதாவின் குடும்பத்தினர் நிதியை வாங்காமல் இருப்பது தொடர்பான தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் கலெக்டர் உள்ளிட்டோர் நிதியை வழங்காமல் திரும்பி சென்றனர்.


Next Story