விருதுநகரில் குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளை விரைவு படுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை


விருதுநகரில் குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளை விரைவு படுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை
x
தினத்தந்தி 4 Sept 2017 3:45 AM IST (Updated: 3 Sept 2017 11:53 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் குடிநீர் வினியோக மேம்பாட்டு பணிகளை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் நகரசபை பகுதிக்கு குடிநீர் வினியோகத்திற்கு நிலத்தடி நீர் ஆதாரம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு குடிநீர் பிரச்சினையின் கடுமை ஓரளவு குறைந்தது. ஆனாலும் குழாய் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலை தொடர்கிறது.

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டின் கிழக்கு பகுதிக்கு குழாய் உடைப்பு காரணமாக இரு மாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதே போன்று முத்துராமன்பட்டி ஆத்துமேடு பகுதியிலும் குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. நீராதாரம் இருந்தும் வினியோகத்தில் ஏற்படும் இடர்பாடுகளை நகரசபை நிர்வாகம் உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் குடிநீர் பிரச்சினை தொடர்கிறது.

நகர்பகுதியில் குடிநீர் வினியோகத்தை சீரமைக்கும் வகையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்காக நகரசபை நூற்றாண்டு நிதியில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அகமது நகர், கல்லூரி சாலை, நாராயணமடம் தெரு ஆகிய பகுதிகளில் இந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகளை கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன.

ஆனால் அகமது நகர் பகுதியில் மட்டும் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமானப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் கல்லூரி சாலையில் 50 சதவீத பணி முடிவடைந்த நிலையில் திட்டப்பணிகள் முடக்கம் அடைந்துள்ளது. நாராயணமடம் தெருவில் மேல்நிலை தொட்டி கட்டுவதற்கான பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை. அத்தியாவசியம் கருதி விரைந்து முடிக்கப்பட வேண்டிய இந்த பணிகள் முடக்கம் அடைந்து விட்ட நிலையில் நகரசபை நிர்வாகம் பணிகளை முடுக்கி விட எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இதே போன்று வினியோகம் தடை பட்டுள்ள பகுதிகளுக்கு புதிய பகிர்மானக்குழாய்களை பதிப்பதிலும் நகரசபை நிர்வாகம் போதிய கவனம் செலுத்தாததால் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. காமராஜர் புறவழிச்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நகரசபை நிர்வாகத்திடம் ரூ.5 லட்சம் நிதி கொடுத்துள்ள போதிலும் நகரசபை நிர்வாகம் குழாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாத நிலை தொடர்கிறது. இதனால் நகர் மக்கள் தான் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது.

குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைப்பதற்கு குடிநீர் வினியோக மண்டலங்களை குறைக்க வேண்டுமென குடிநீர் வடிகால் வாரியத்துறை அதிகாரிகள் பலமுறை பரிந்துரைத்தும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது. இதனால் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க முடியாத நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு விருதுநகரில் குடிநீர் வினியோக திட்ட மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் குடிநீர் வினியோக பிரச்சினை கடுமையாகும் நிலை தவிர்க்க முடியாததாகி விடும்.


Next Story