கீரனூர், நெடுவாசலில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கீரனூர், நெடுவாசலில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீரனூர்,
நீட் தேர்வு காரணமாக தனது மருத்துவ படிப்பு கனவு கலைந்ததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டித்து அரசியல் கட்சியினர், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கீரனூரில் நேற்று முன்தினம் இரவு தி.மு.க. சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து அனிதாவின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் 2–வது கட்டமாக போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். நேற்றும் 145–வது நாளாக நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நீட் தேர்வு பாதிப்பால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உருவப்படத்தை கையில் ஏந்திக்கொண்டு, மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.