மத்திய, மாநில அரசுகள் ‘பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் செயல்படவில்லை’ வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி
திண்டிவனத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில தலைவரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தகுமார், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
திண்டிவனம்,
திண்டிவனத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில தலைவரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தகுமார், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘நீட்’ தேர்வு பிரச்சினையில் மாணவி அனிதா இறப்பு என்பது தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டியது. மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வத்தோடு படித்தவர் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன், ஒரு வருடத்திற்கு ‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வாங்கி தருவேன் என்று வாக்குறுதி தந்தார். அதன்படி தமிழக அரசு அதற்கான சட்டத்தை இயற்றி மத்திய அரசிடம் தந்தனர். மத்திய அரசு அதனை செயல்படுத்தாத நிலையில், வாக்குறுதியை தராமல் இருந்திருந்தால் அனிதா தற்கொலை தவிர்க்கப்பட்டு இருக்கலாம். மத்திய அரசும், தமிழக அரசும் பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் செயல்படவில்லை.
மத்திய அரசு, தமிழக அரசை மறைமுகமாக இயக்கி வருகிறது. அ.தி.மு.க.வின் பலவீனத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க.வினர் காலூன்ற நினைக்கின்றனர். தேர்தல் மூலமாகவும் அதிகாரத்தை பிடிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆளும் அ.தி.மு.க.வினருக்கும் தினகரன் அணிக்கும் பனிப்போர் இல்லை. நேரடியாகவே போர் நடைபெறுகிறது. ஆட்சியாளர்களிடம் பணபலம், படைபலம் உள்ளது. இதைத்தாண்டி தினகரன் வெற்றி பெறுவாரா? என்பது சந்தேகம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திண்டிவனம் நகர தலைவர் விநாயகம், நிர்வாகிகள் சுப்பையா, கோவிந்தன், மதன்குமார், தயாளன், கலீல்பாஷா, தரண், ஏழுமலை, வெங்கட் உள்பட பலர் உடனிருந்தனர்.