மாணவி அனிதா தற்கொலை எதிரொலி: மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்


மாணவி அனிதா தற்கொலை எதிரொலி: மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2017 6:45 AM IST (Updated: 4 Sept 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சேலம்,

‘நீட்‘ தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாத அரியலூர் மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆத்தூர் பழைய பஸ்நிலையம் அருகே, மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பதாக கூறி சேலம் கிழக்கு மாவட்ட விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சி.க.முத்து தலைமை தாங்கினார். இதில் விடுதலைசிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நாராயணன், செல்வம் மற்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வ.கோபால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் முன்அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சி.க.முத்து உள்பட விடுதலைசிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 65 பேர் மீது ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

ஓமலூரில் உள்ள காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாணவி அனிதா சாவுக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அரியாகவுண்டர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் தங்கவேல், செயற்குழு உறுப்பினர் வெங்கடாஜலம், சின்னராஜ், பார்வதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தாரமங்கலம் பஸ்நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தாரை செந்தில்குமார் தலைமை தாங்கினார். வீரபாண்டி ராஜா, அய்யப்பன், ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சரவணமூர்த்தி, சேட்டு, பிரபாகரன், ராஜ்குமார், பச்சமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேச்சேரி பஸ்நிலையம் அருகே விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதற்கு மேட்டூர் சட்டமன்ற தொகுதி விடுதலைசிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை செயலாளர் கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ‘நீட்‘ தேர்வுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

கொளத்தூர் பஸ் நிலையம் அருகே மாணவி அனிதா சாவுக்கு நீதி விசாரணை வேண்டியும், ‘நீட்‘ தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சசிக்குமார் தலைமை தாங்கினார். இதில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

மாணவி அனிதா தற்கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தலைவாசல் பஸ்நிலையம் எதிரில் நண்பர்கள் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிஷான்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் செந்தில், பிச்சமுத்து, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story