மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு கடலூரில் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு கடலூரில் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடலூர்,
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு நீதி கேட்டு கடலூர் உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்களும், சாலை மறியல் போராட்டங்களும் நடந்தன. கடலூரில் நேற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கடலூர் தலைமை தபால் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் குருராமலிங்கம், எஸ்.என்.கே.ரவி, மீனவர் பேரவை சுப்புராயன், துரைவேலு, சிவாஜி கணேசன், மனிதநேய ஜனநாயக கட்சி மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் எம்.சேகர், அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், நாடார் சங்க செயலாளர் பாஸ்கரன், சண்முகம், தர்மராஜ், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அருகில் பெரியார் அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவி அனிதா சாவுக்கு மத்திய, மாநில அரசுகள் காரணம் எனக்கூறி அரசுகளை கண்டித்து மாணவர்கள் கோஷங்கள் போட்டனர்.