வேலூரில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி சத்துணவு பணியாளர்கள் ஊர்வலம்
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1, 500 சத்துணவு பணியாளர்களின் ஊர்வலத்தை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
வேலூர்,
மறைந்த தமிழக முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் வருகிற 9–ந் தேதி (சனிக்கிழமை) வேலூர் கோட்டை மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் கவிதை, பேச்சு, கட்டுரை போட்டிகள், விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூரில் சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நேற்று நடந்தது.
நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை அமைச்சர் கே.சி.வீரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அண்ணாசாலை வழியாக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 1, 500 சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தின் பிரசார வாகனங்களையும், பொது நூலகத்துறையின் நடமாடும் நூலகத்தையும் அமைச்சர் மற்றும் கலெக்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இந்த ஊர்வலம் சத்துணவு திட்டத்தில் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே தெரிவிக்கும் வகையில் இந்த ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு சென்று எம்.ஜி.ஆரின். வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படங்கள், அவர் நடித்த படங்கள் மக்களுக்கு போட்டுக்காட்டப்படும். இந்த நடமாடும் நூலகத்தில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறித்த புத்தங்கள் உள்ளது. இந்த நடமாடும் நூலகத்தின் மூலமாகவும் எம்.ஜி.ஆர்.குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்’’ என்றனர்.
இந்த நிகழ்ச்சியில், லோகநாதன் எம்.எல்.ஏ, ஆவின் தலைவர் வேலழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோதண்டராமன், தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.