பனக்கல் பகுதியில் பட்டப்பகலில் பயங்கரம் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி


பனக்கல் பகுதியில் பட்டப்பகலில் பயங்கரம் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 4 Sept 2017 4:00 AM IST (Updated: 4 Sept 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

பனக்கல் பகுதியில் பட்டப்பகலில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற காபித்தோட்ட அதிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சிக்கமகளூரு,

பனக்கல் பகுதியில் பட்டப்பகலில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற காபித்தோட்ட அதிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

நடத்தையில் சந்தேகம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்(வயது 35). காபித்தோட்ட அதிபர். இவருக்கும் அதேப்பகுதியைச் சேர்ந்த அஸ்வினி(32) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.

மேலும் அஸ்வினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரவீன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி வந்தார். இதனால் மனமுடைந்த அஸ்வினி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவரை விட்டு பிரிந்தார். மேலும் தனது மகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

காரில் பின்தொடர்ந்தார்

இந்த நிலையில் பிரவீனுக்கு தொடர்ந்து அஸ்வினியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் அடிக்கடி அஸ்வினியை சந்தித்து கேட்பதும், அப்போது இருவருக்கும் தகராறு நடைபெறுவதும் தொடர்கதையாகி வந்தது. இந்த நிலையில் மனைவியின் மேல் இருந்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்துவிட பிரவீன் முடிவு செய்தார்.

அதற்காக அவர் நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். அதன்படி நேற்று காலையில் அஸ்வினி தனது வீட்டில் இருந்து காரில் பனக்கல் டவுனுக்கு புறப்பட்டார். இதை அறிந்த பிரவீனும் காரில், அஸ்வினியை பின்தொடர்ந்தார்.

தப்பி ஓட்டம்

பின்னர் அஸ்வினி பனக்கல் டவுனுக்கு வந்து அங்குள்ள ஒரு கடையின் முன்பு காரை நிறுத்தினார். அதையடுத்து அவர் காரில் இருந்து இறங்கி நின்றார். அதைப்பார்த்த பிரவீன் தனது காரால் அஸ்வினி மீது பயங்கரமாக மோதினார். இதில் அஸ்வினி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதையடுத்து பிரவீன் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அஸ்வினியை மீட்டு சிகிச்சைக்காக மூடிகெரே அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து பனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று அஸ்வினியிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிரவீன், தனது மனைவி அஸ்வினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததும், அதன் காரணமாக அவர் அஸ்வினி மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரவீனை வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story