திருவாரூர் மருத்துவமனையில் லிப்டில் சிக்கி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தவிப்பு
திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாதி வழியில் நின்ற லிப்டில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ½ மணி நேரம் சிக்கி தவித்தார். கதவை உடைத்து அவர் மீட்கப்பட்டார்.
திருவாரூர்,
நாகப்பட்டினம் நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 9 மீனவர்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று அந்த மருத்துவமனைக்கு சென்றார். நாகை எம்.பி கோபால், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
இவர்கள் அனைவரையும் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் வரவேற்று மீனவர்களை சந்திப்பதற்காக 2–வது மாடிக்கு லிப்டில் அழைத்து சென்றார்.
அப்போது திடீரென பழுது காரணமாக லிப்ட், முதல் மற்றும் 2–வது மாடிக்கு இடைப்பட்ட பகுதியில் பாதி வழியில் நின்றது. இதனால் லிப்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் பரிதவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த பணியாளர்கள் லிப்ட்டை முதல் மாடிக்கு இறக்கி, அமைச்சர் உள்ளிட்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் லிப்ட்டை முதல் மாடிக்கு முழுமையாக கொண்டு வர முடியவில்லை. அதன் கதவையும் திறக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து லிப்டின் கதவை உடைத்து, அதில் சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக சிக்கி தவித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரை மீட்டனர்.
அதன்பிறகு அமைச்சர், காயம் அடைந்த மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.