புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க ரே‌ஷன் கார்டுகளுடன் வந்ததால் பரபரப்பு


புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க ரே‌ஷன் கார்டுகளுடன் வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Sept 2017 4:30 AM IST (Updated: 5 Sept 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் ரே‌ஷன் கார்டுகளை ஒப்படைக்க பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கோபிசெட்டிபாளையம் அருகே காசிபாளையம் மணியகாரன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் தங்களது ரே‌ஷன் கார்டுகளையும், ஸ்மார்ட் கார்டுகளையும் ஒப்படைப்பதற்காக கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

காசிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட மணியகாரன்பாளையத்தில் 1,800–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை கிடையாது. மணியகாரன்பாளையம் முத்துநகர் கரட்டுப்பாளையம்ரோட்டில் டாஸ்மாக் கடை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அருகில் விநாயகர் கோவில் உள்ளது. மேலும், 3 திறந்தவெளி கிணறுகளும், கீழ்பவானி வாய்க்காலும் உள்ளன. எனவே கடை அமைக்கப்பட்டால் நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதுடன், குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்துவிட நேரிடும்.

கடை அமைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 500 அடி தூரத்தில் அரசு மேல்நிலை பள்ளிக்கூடமும் உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். எனவே டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

இதேபோல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘‘ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பவானிரோட்டில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கடையை திறப்பதற்கு அனுமதிக்கக்கூடாது’’, என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில செயலாளர் அன்புத்தம்பி தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘ஈரோடு மாநகராட்சி 57–வது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்து தொல்லை கொடுக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் சாக்கடை தூர்வாரப்படாமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதால் சாக்கடையை தூர்வார வேண்டும்’’, என்று கூறிஇருந்தனர்.

ஈரோடு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராதாமணி பாரதி கொடுத்த மனுவில், ‘‘ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ–சேவை மையங்களில் மட்டுமே பிழை திருத்தம் செய்ய முடியும். இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் உள்ள இ–சேவை மையங்களிலும் ஸ்மார்ட் கார்டுகளின் பிழை திருத்தம் செய்யப்பட வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி திரையரங்கம் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தமிழ்நாடு சாதி மறுப்பு திருமண பாதுகாப்பு சங்கத்தினரும், ஈரோடு மாவட்டத்தில் மதமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அனுமதியின்றி செயல்படும் ஆன்மிக தலங்களை தடைசெய்ய வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா கட்சியினரும் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

இதேபோல் உதவித்தொகை, குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு, கடன் உதவி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 211 மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணி உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story