இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 76 பேர் காரைக்கால் வந்தனர்


இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 76 பேர் காரைக்கால் வந்தனர்
x
தினத்தந்தி 5 Sept 2017 7:00 AM IST (Updated: 5 Sept 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 76 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களும் கடலில் தத்தளித்தபோது மீட்கப்பட்ட 4 மீனவர்களும் நேற்று காரைக்கால் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.

காரைக்கால்,

நாகப்பட்டினம், ராமேசுவரம், புதுக்கோட்டை உள்பட கடலோர மாவட்டங்களை சேர்ந்த 76 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் கடந்த மாதம் 31-ந் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட அவர்கள் இந்திய தூதரகம் உதவியுடன் அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே கடலில் மீன்பிடிக்கச் சென்ற படகு பழுதாகி தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து வைத்து இருந்தனர். இவர்களையும் இலங்கை கடற்படை மூலம் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இவர்கள் 80 பேரையும் இலங்கை கடற்படை தங்களின் கப்பலில் அழைத்துவந்து, சர்வதேச எல்லையில் இந்திய கடலோர காவல் படையிடம் நேற்று ஒப்படைத்தது. அங்கிருந்து அவர்களை இந்திய கடற்படையினர் கப்பல்களில் அழைத்து வந்தனர். நேற்று இரவு 9.45 மணியளவில் காரைக்கால் துறைமுகத்துக்கு மீனவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

அவர்களை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள், தங்களின் படகுகளையும் இலங்கையில் இருந்து மீட்டுக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story