வீரபாண்டி ஒன்றிய கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு


வீரபாண்டி ஒன்றிய கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 Sept 2017 4:30 AM IST (Updated: 5 Sept 2017 4:32 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி ஒன்றியத்தில் 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை கலெக்டர் வாங்கினார்.

வீரபாண்டி ஒன்றியத்தில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், எங்கள் ஒன்றியத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக ரூ.319 தினக்கூலியாக வழங்கப்பட்டது. தற்போது ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. எனவே எங்களுக்கு சேர வேண்டிய சம்பளம் கிடைக்கவும், பழைய சம்பளமே வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

சேலம் குகையை சேர்ந்த பிரேமா (வயது 34) என்பவர் கொடுத்துள்ள மனுவில், தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் சீட்டுப்பணம் ரூ.6 லட்சம் மற்றும் வேலை தொடர்பாக 6 கிலோ வெள்ளி கொடுத்தேன். ஆனால் பணம், வெள்ளியை திருப்பி கொடுக்காமல் அவர் ஏமாற்றி வருகிறார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அந்த நபர் என்னை மிரட்டி வருகிறார் என கூறியுள்ளார்.

ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டையை சேர்ந்த சின்னு மனு கொடுத்தார். அதில், வடக்கு சரபங்காநதியில் விவசாய பாசனத்திற்கு வாய்கால் வசதி உள்ளது. இதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்கவும், சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறையின்படி தீர்வு காணவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.விஜய்பாபு, காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story