நாமக்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்


நாமக்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Sept 2017 4:46 AM IST (Updated: 5 Sept 2017 4:46 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 443 மனுக்கள் குவிந்தன. மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் ஆசியா மரியம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை கேட்டும், இலவச வீட்டு மனைப்பட்டா வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் மொத்தம் 443 மனுக்கள் குவிந்தன.

அதை தொடர்ந்து தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மின்மோட்டார் பொருத்திய தையல் எந்திரத்தையும், மற்றொருவருக்கு மடக்கு குச்சியினையும், 39 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் (கலால்) இலாஹிஜான், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story