மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மதுக்கடை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மதுக்கடை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 5 Sept 2017 5:00 AM IST (Updated: 5 Sept 2017 5:00 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மதுக்கடை கேட்டு கலெக்டரிடம் ஊருடையான் குடியிருப்பு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

தமிழர் விடுதலை களம் அமைப்பின் நெல்லை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் கிராம மக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியன் திருவேங்கடநாதபுரம் அருகே உள்ள அத்திமேடு கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் உள்ளன. அவர்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். பருவமழை பொய்த்ததால் விவசாயம் செய்ய முடியவில்லை.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்தார்கள். தற்போது 20 நாட்களாக வேலை வழங்கவில்லை. இதனால் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

மக்கள் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் சாத்தை பாக்கியராஜ் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்து திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் முற்றுகை போராட்டம் நடந்தினர். பின்னர் நிர்வாகிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “மாணவி அனிதா 1,176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கு மத்திய- மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ரு.1 கோடி இழப்பீடும், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை ஊருடையான் குடியிருப்பு மக்கள் கலெக் டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்த மனுவில், “நெல்லை ஸ்ரீபுரம் முதல் தச்சநல்லூர் வரை செல்லும் சாலையில் ஊருடையான் குடியிருப்பில் தற்காலிகமாக ஒரு மதுக்கடை இயங்கி வருகிறது.

இந்த கடை வந்ததில் இருந்து எங்கள் ஊரை சேர்ந்தவர் கள் வேறு இடங்களுக்கு சென்று மது குடிப்பது இல்லை. எனவே அந்த இடத்தில் நிரந்தரமாக மதுக் கடை அமைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.
நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்த இசக்கியம்மாள், லட்சுமி, சரோஜா உள்ளிட்ட ஏராளமான பெண்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி வரை மோசடி செய்துள்ளார்.

அவருடைய கணவர் மத்திய ரிசர்வ் போலீஸ்காரராக உள்ளார். எனவே நாங்கள் செலுத்திய பணத்தை தர மறுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லையை அடுத்த சிறுக்கன்குறிச்சியை சேர்ந்த விவசாயி அரிகிருஷ்ணன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள செருக்குடையார்குளம் கடந்த 50 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் அந்த குளத்தில் தண்ணீர் தேங்குவது இல்லை. விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த குளத்தை தூர்வாரி, பழுதடைந்த மடைகளை சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரியில் இடம் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த மாணவி

நாங்குநேரி தாலுகா இட்டமொழி புதூரை சேர்ந்த ஜெகதீஸ் என்பவருடைய மகள் கிறிஸ்டி பிரதீபா. இவர் தன்னுடைய தாயாருடன், கலெக்டர் சந்தீப் நந்தூரியை கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையில் உள்ளது. நான் 10-ம் வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்றேன். அப்போதைய மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம் நற்சான்று பெற்றேன். எனக்கு நாமக்கல்லில் உள்ள பள்ளிக்கூடத்தில் இலவசமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தேன். மருத்துவ படிப்புக்கு கட் ஆப் மதிப்பெண் 197.50 ஆக இருந்தது. நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் பெற்றேன். எனக்கு பல் மருத்துவ படிப்புக்கு சுயநிதி கல்லூரியில் சேர்வதற்கு கலந்தாய்வு வந்தது.

அந்த கலந்தாய்வில் நான் கலந்து கொள்ளவில்லை. ரூ.2 லட்சம் வரை கட்டணம் கேட்கிறார்கள். அவ்வளவு பணம் கொடுத்து என்னால் சேர முடியவில்லை. இந்த நிலையில் மாணவி அனிதாவின் தற்கொலை என்னை போன்ற பல்வேறு மாணவ- மாணவிகளை பாதித்துள்ளது. நீட் தேர்வால் என்னை போன்று நல்ல மதிப்பெண் வாங்கிய மாணவ- மாணவிகளால் மருத்துவ படிப்பில் சேர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுத்த எனக்கு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story