நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வ.உ.சி. கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வ.உ.சி. கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2017 5:11 AM IST (Updated: 5 Sept 2017 5:11 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். ஆதித்தமிழர் பேரவையினர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி,

மாணவி அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அமர்நாத் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சுரேஷ், மாநகர பொறுப்பாளர் பிரவீன், தலைவர் ஜாய்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் நேற்று காலை 11 மணி அளவில் தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் அருந்ததி அரசு, மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், முருகேசன், ஜான், அன்புசெல்வன், சந்தணம், பெரியசாமி, மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிர் பாசறை மண்டல செயலாளர் குந்தவி தீபா தலைமை தாங்கினார். தென்மண்டல செயலாளர் குயிலி, நெல்லை மண்டல செயலாளர் தமிழ்செல்வி, மழலையர் பாசறை செயலாளர் இனியா, செய்தி தொடர்பாளர் தங்கமாரியப்பன், மாவட்ட தலைவர் மாரியப்பன், செயலாளர் பாண்டி, பொருளாளர் ஜெயபாஸ், பொதுக்குழு உறுப்பினர் குந்தன், தொகுதி இணை செயலாளர் முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story