‘நீட்’ தேர்வு குறித்து நான் எந்த கருத்தையும் கூற மாட்டேன்


‘நீட்’ தேர்வு குறித்து நான் எந்த கருத்தையும் கூற மாட்டேன்
x
தினத்தந்தி 5 Sept 2017 5:28 AM IST (Updated: 5 Sept 2017 5:28 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்‘ தேர்வு குறித்து நான் எந்த கருத்தையும் கூற மாட்டேன் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்களான மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ்கோயல், மத்திய மந்திரி அனந்தகுமார், எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈசுவரப்பா உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்வது என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன். கர்நாடகத்தில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் விவாதித்தேன். கட்சியை பலப்படுத்துவதில் நிர்வாகிகள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். அவர்கள் கூறிய ஆலோசனைகள், கருத்துகள் கட்சியின் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது.

விவசாயிகள் விரோத, மக்கள் விரோத, ஜனநாயக விரோத சித்தராமையாவின் அரசை வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் தூக்கி அடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மருத்துவ படிப்புக்கான ‘நீட்‘ தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுபற்றி நான் எந்த கருத்தையும் கூற மாட்டேன்.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.


Next Story