பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன் உறவினர்கள் சந்திப்பு
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை உறவினர்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பகிரங்கமாக கூறினார். இதையடுத்து அனைத்து வசதிகளும் ரத்து செய்யப்பட்டு அவர் சாதாரண சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உயர்மட்ட குழுவின் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சிறையில் சசிகலா மற்றும் இளவரசியை அவருடைய உறவினர்களான டி.டி.வி.தினகரனின் மனைவி அனுராதா, இளவரசியின் மகன் விவேக், அவருடைய மனைவி கீர்த்தனா, இளவரசியின் மகள் ஷகிலா, டாக்டர் வெங்கடேஷ், ராஜராஜன் மற்றும் கர்நாடக அ.தி.மு.க.(அம்மா) அணி செயலாளர் வா.புகழேந்தி, தமிழக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்பட அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.
முன்னதாக அவர்கள் காலை 11.30 மணியளவில் சிறைக்கு வந்தனர். அவர்களை சிறை அதிகாரிகள் மாலையில் வரும்படி திருப்பி அனுப்பினர். பிறகு மாலையில் வந்த அவர்கள் 4.30 மணிக்கு சிறைக்குள் சென்றனர். சுமார் 7 மணியளவில் அவர்கள் சிறையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் நிருபர்களிடம் பேசாமல் காரில் ஏறி சென்றுவிட்டனர். சிறையில் சசிகலாவை சந்தித்த அவர்கள் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.Related Tags :
Next Story