விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சோலார் பம்புசெட்டுகள் கலெக்டர் தகவல்


விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சோலார் பம்புசெட்டுகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 12:08 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சோலார் பம்பு செட்டுகள் அமைத்து தரப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில் விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு கிடைப்பது மிகவும் காலதாமதமாகிறது. இந்த நிலையில் சுற்றுப்புறச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு விவசாயிகளின் நீர்பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மரபு சாரா எரிசக்தியில், அதாவது சூரிய ஒளியில் இயங்கக்கூடிய பம்ப் செட்டினை அரசு மானியத்துடன் அமைத்து தரும் திட்டம் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம் மின்சாரத்தை எதிர்நோக்கி இல்லாமலும், பிற எரிபொருளான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் செலவின்றியும், இயற்கையாக கிடைக்கும் சூரிய சக்தியினை பயன்படுத்தி விவசாயிகள் பம்புசெட்டை இயக்கி நீர்ப்பாசனத்திற்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

தற்போது விவசாயிகளிடையே சூரியசக்தி மூலம் இயங்கும் பம்புசெட்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், தமிழக அரசு நடப்பாண்டில் இந்த வகை மோட்டார் பம்புசெட்களை 1000 விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் வழங்க உள்ளது.

இலவச மின் இணைப்பு பெற விண்ணப்பித்து, பதிவு மூப்பு பட்டியலில் இருந்து தங்களை நீக்கிக்கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், ஏற்கனவே இலவச மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள், சூரியசக்தி பம்புசெட் கிடைத்தால் தங்களுக்கு இலவச மின்சாரம் வேண்டாம் என்று எழுத்து பூர்வமாக சம்மதம் தரும் விவசாயிகளுக்கு மட்டும் இத்திட்டத்தின்கீழ் 90 சதவீத அரசு மானியத்துடன் சூரியசக்தி பம்புசெட்கள் அமைத்து தரப்படும்.

நடப்பாண்டில் நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பதிவு மூப்பு அடிப்படையில் சோலார் பம்புசெட் அமைத்து தரப்படும். இந்த நிபந்தனையின்படி சோலார் பம்புசெட் அமைக்க விரும்பும் விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம், கருவூல கட்டிடத்தில் 2–வது தளத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம். இதேபோல பரமக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் கொல்லம்பட்டரை தெருவில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.


Next Story