காரைக்குடி அருகே மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கிராம மக்கள் பாதிப்பு


காரைக்குடி அருகே மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கிராம மக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே உள்ள வ.சூரக்குடி கிராமத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதால் கிராம மக்கள் எந்தவித தொழிலையும் மேற்கொள்ள முடியாமல் முடங்கி போய் உள்ளனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை யூனியனைச் சேர்ந்தது வ.சூரக்குடி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாய வேலையே செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சமீப காலமாக மர்மக் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். இங்குள்ள அம்பேத்கர்நகர், மேலத்தெரு, கீழத்தெரு, அரசு தொடக்கப்பள்ளி பகுதியில் அதிக அளவில் இந்த மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

இந்த பகுதியில் வசித்து வரும் கணேசன் (வயது 37), அவரது மகன் சிவனேசன்(16), குமார்(33), விஜயா (35) மற்றும் அழகன்(42), வெள்ளையம்மாள்(40), மீனாள்(39), கீதா(32), அனுசுயா (16), சந்தியா(18) உள்பட 60–க்கும் மேற்பட்டோர் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது காரைக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இன்னும் சில பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மர்மக் காய்ச்சல் காரணமாக இக்கிராம மக்கள் வேலைக்கு செல்லாததால் கிராமமே முடங்கிப்போய் விட்ட சூழல் நிலவுகிறது.

இந்த பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, குடிநீர் குழாய் அருகே சாக்கடை கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது தவிர ஆங்காங்கே குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து இக்கிராமத்தில் வசித்து வரும் பழனியப்பன் மற்றும் ராமசாமி ஆகியோர் கூறியதாவது:–

வ.சூரக்குடி பஞ்சாயத்தில் ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே பணியாற்றுவதால் அவர் சரியான முறையில் இந்த பகுதிக்கு சுத்தம் செய்ய வருவதில்லை.

இது தவிர, கொசு மருந்து அடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் இங்கு குப்பைகள் சேகரிப்பதற்காக உள்ள குப்பை வண்டிகள் அனைத்தும் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு செயல்பாடின்றி கிடக்கிறது. மேலும் இங்குள்ள ஒரே ஒரு பொதுக்கழிப்பறையும் சரிவர பயன்படுத்தப்படாமல் நிரந்தரமாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர இங்கு வசிக்கும் மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது.

இங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரம் உள்ள காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று தான் மக்கள் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இது தவிர, அம்பேத்கர் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு பல மாதங்களாகி விட்டது. அதில் உள்ள தரமற்ற குடிநீரைத்தான் இப்பகுதி மக்கள் குடித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள ஒரு சிலருக்கு டெங்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மர்மக் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அன்றாட பணிகள் செய்ய முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். மக்களை பயமுறுத்தும் இந்த மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்தி சிறப்பு சுகாதார பணிக்குழுவினரைக் கொண்டு இந்த காய்ச்சலை கட்டுப்படுத்துவதுடன், இந்த காய்ச்சல் வராமல் எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story