அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்: காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் குவிந்த வாகன ஓட்டிகள்


அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்: காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் குவிந்த வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 5 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-06T00:13:38+05:30)

அசல் ஓட்டுனர் உரிமம் இன்று முதல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியானதையடுத்து காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் வாகன ஓட்டிகள் குவிந்தனர்.

காரைக்குடி,

தமிழகத்தில் வாகன ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமானால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்வோர் பல்வேறு காரணங்களைக் கூறி அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு பல்வேறு சிரமங்களுக்கு இடையே வாகன ஓட்டுனர் உரிமத்தை பெறும் ஓட்டுனர்கள் அதனை பாதுகாப்பாக வீட்டில் வைத்து விட்டு அதன் நகலை மட்டும் எப்போதும் வைத்திருப்பார்கள். போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது அந்த நகல் ஓட்டுனர் உரிமத்தை மட்டும் காட்டி விட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் வாகனங்களில் செல்லும் போது அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு வாகன ஓட்டுனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அசல் ஆவணங்களுடன் வாகனங்களில் செல்லும்போது அவை தொலைந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ அதனை மீண்டும் பெறுவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்று அவர்கள் புகார் கூறி வருகின்றனர். எனவே இந்த உத்தரவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 6–வது வீதியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள், அசல் உரிமத்தை தொலைத்து விட்டு நகல் மட்டும் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த உரிமத்திற்கு விண்ணப்பிக்க காலை 8 மணி முதலே குவிந்தனர். மேலும் இவர்கள் அலுவலகத்திற்கு முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அவர்களின் விண்ணப்ப படிவங்களை போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா ஆய்வு செய்து அவற்றை பரிந்துரை செய்தார். இது குறித்து வட்டார மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா கூறியதாவது:–

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருப்பதன் மூலம் அவர்கள் குடிபோதையில் வாகனங்களை ஓட்டவோ, சாலை விதிமுறைகளை மீறவோ முடியாது. மேலும் அவர்கள் சரியான முறையில் வாகனங்களை இயக்குவதால் தொடர் விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகள் குறையும். இது சில தனியார் கனரக வாகன ஓட்டிகளுக்கு பொருந்தும். மேலும் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படும் வகையில் இந்த நடவடிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story