தாம்பரம் அருகே மாநகர பஸ் பள்ளத்தில் பாய்ந்தது; 50 பயணிகள் உயிர் தப்பினர்
தாம்பரம் அருகே மாநகர பஸ் பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர் தப்பினர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோவளத்திற்கு நேற்று காலை அரசு மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் 50 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் மேம்பாலத்தில் ஏறி, பிறகு மெதுவாக கீழே இறங்கிக் கொண்டிருந்தது.
அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை இடது புறமாக திருப்ப முயற்சி செய்தார். என்றபோதிலும், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகில் இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது பஸ்சின் டீசல் டேங்க் உடைந்து சாலை முழுவதும் டீசல் கொட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பஸ் பக்கவாட்டில் கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்திலும் டீசல் டேங்க் உடைந்ததால் பஸ்சில் தீ பற்றிக்கொள்ளுமோ என்ற பயத்தின் காரணமாகவும் பயணிகள் ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் பள்ளத்தில் இருந்து பஸ்சை மீட்டனர்.
மேலும் இதுதொடர்பாக மாநகர பஸ் டிரைவர் விஜயகுமார்(வயது 50) மற்றும் கண்டக்டர் சுரேஷ் (40) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக தாம்பரம் – செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.